‘முதற்கட்டமாக 5,000 பேருக்கு பணி நிரந்தரம்’ - செவிலியர்கள் உடனான பேச்சுவார்த்தையில் அமைச்சர் உறுதி

சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள்.
சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள்.
Updated on
1 min read

சென்னை: முதற்கட்டமாக 5,000 பேரை பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று பேச்சுவார்த்தையின்போது மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்ததாக, செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டில் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இதன்படி செவிலியர்கள் சங்கத்தின் 8 பேர் கொண்ட குழுவினர் இன்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

“இந்தப் பேச்சுவார்த்தையில், இந்த நிதியாண்டில் முதற்கட்டமாக 5,000 பேரை பணி நிரந்தரம் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்” என்று சங்கத்தின் செயலாளர் அம்பேத்கர் கணபதி தெரிவித்தார்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், "2015 - 2020 வரை எம்ஆர்பி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தற்பொழுது 230 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளன.

கடந்த 2 ஆண்டுகளாக பணி ஓய்வு பெறுவோரின் வயது உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பணி ஓய்வு பெறவில்லை. இந்த ஆண்டு பணி ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் அடிப்படையில் காலி பணியிடங்கள் உருவாக்கப்பட்டு செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தரப்படும்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in