Published : 07 Jun 2022 05:22 PM
Last Updated : 07 Jun 2022 05:22 PM

புழல் நீர்ப்பிடிப்பு நிலத்தை தனியார் பயன்பாட்டுக்கு மாற்றினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்: இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

சென்னை: “புழல் ஏரியை ஒட்டி நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில், குறிப்பிட்ட சில தனியார் நிறுவன பயன்பாட்டுக்கு மாற்றலாம் என வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இத்தகைய மக்கள் விரோதப் போக்கை திமுக அரசு கைவிடாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்து ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள திமுக ஆட்சியாளர்கள், காய்ந்த மாடு கம்பம் கொல்லையில் பாய்ந்தது போல, தமிழகத்தை பிரித்து மேயத் தொடங்கி இருக்கிறார்கள். "கொள்ளை அடிப்பது ஒரு கலை, கொக்கு, மீனை கொத்தாமல் இருந்தால்; புலி, ஆட்டை அடிக்காமல் இருந்தால்; பாம்பு, தவளையை விழுங்காமல் இருந்தால்... நானும் கொள்ளை அடிக்காமல் இருப்பேன்" என்று வசனம் எழுதியவரின் வாரிசுகள், தமிழகத்தின் நானிலத்தையும் கூறுபோட்டு விற்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது கண்டு மக்கள் கொதிப்படைந்து போயிருக்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து அதிமுக அரசிலும் நில அபகரிப்பு மாபியாக்களின் கொட்டம் அடக்கப்பட்டது. அப்போதைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான அபகரிப்பு நிலங்கள், பறிமுதல் செய்யப்பட்டு சொத்தை இழந்த அப்பாவி மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. ஆனால் இப்போது, அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் ஆட்சியாளர்களின் ஆக்டோபஸ் கரங்கள், தனியார் நிலங்களை மட்டுமல்ல, அரசு நிலங்களையும் ஆக்கிரமிப்பதாக செய்திகள் வருகின்றன. குறிப்பாக, நீர்வழி புறம்போக்கு நிலங்களை ஆளும் கட்சியினர் ஆக்கிரமித்து வருகின்றார்கள்.

நீர்வழிப் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், மழைக் காலங்களில் சென்னை மாநகரில் ஏற்படும் பெரும் வெள்ள பாதிப்புகளைக்களைய, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது. ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் உள்ள நீர்வழி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இந்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதங்களில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ நகரில் சுமார் 255 வீடுகள் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்றும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொதுப்பணித் துறையினர் அந்த வீடுகளை இடித்துத் தள்ளி, சுமார் 3000 மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு குடியிருப்புவாசி தன்னைத் தானே எரித்து மாய்த்துக்கொண்ட சம்பவமும் நடந்தது. இது, அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன. அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டிப்பாக அகற்றப்படும் என்று கூறிய திமுக அரசு, இன்று அவர்களுக்கு வேண்டிய ஒரு சிலர் அபகரித்த நீர்வழி ஆக்கிரமிப்புகளுக்கு துணை நிற்கும் வகையில், நீர்வழி ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்த வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலம் உத்தரவிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வருகின்றன.

புழல் ஏரியை ஒட்டி நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை குறிப்பிட்ட சில தனியார் நிறுவனப் பயன்பாட்டுக்கு மாற்றலாம் என வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுப்பணித் துறை, குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக வீட்டு வசதித் துறை செயலர் பிறப்பித்துள்ள உத்தரவு, சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், இதனால், இந்த உத்தரவை எப்படி செயல்படுத்துவது என்பதில் CMDA அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமைத் திட்டத்தில் நிலங்களின் வகைப்பாடு சர்வே எண் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஏரியை ஒட்டியுள்ள பெரும்பாலான நிலங்கள் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதியில் எந்தவித கட்டுமானத் திட்டங்களுக்கும் அனுமதி கிடையாது என முழுமைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது சட்ட விதிகளிலும், இப்பகுதியில் கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் திட்டமும் இப்பகுதிக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டது. இத்தடைகள் இருந்தாலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் விதி மீறல் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. இந்த விதி மீறல் கட்டுமானங்களை வரைமுறைப்படுத்த வாய்ப்பில்லாத நிலையில், இவற்றின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

ஏற்கெனவே, இங்குள்ள மோரை, வெள்ளானூர் கிராமங்களில் 16 வெவ்வேறு சர்வே எண்களுக்கு உட்பட்ட 120 ஏக்கர் நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்வதற்கான கோரிக்கை CMDA-க்கு வந்தது. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் அரசிடம் மேல்முறையீடு செய்தனர் என்றும், அவர்களது மேல்முறையீட்டை திமுக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுமானத் திட்டங்கள் தடை செய்யப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ள நிலங்களின் வகைப்பாட்டை, நிறுவனப் பயன்பாட்டிற்காக மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும், மேம்பாட்டுப் பணிகள் 2008 செப்டம்பர் 2ம் தேதிக்கு முன் நடந்து இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதன் அடிப்படையில் வகைப்பாட்டை மாற்றலாம் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தும்பை விட்டுவிட்டு, வாலைப் பிடிப்பது போல, ஏற்கெனவே நீர்வழி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய பல உத்தரவுகளை மனதில் கொண்டு, புழல் ஏரியை ஒட்டி நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில், குறிப்பிட்ட சில தனியார் நிறுவன பயன்பாட்டுக்கு மாற்றலாம் என வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை சமீபத்தில் வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்த ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்களுக்கு, அதிகாரிகளும் துணை போவதைக் கைவிட்டுவிட்டு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். மக்கள் விரோதப் போக்கை இந்த திமுக அரசு கைவிடாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x