சென்னை - சத்தியவாணி முத்து நகர் மக்களுக்கு கே.பி.பார்க் குடியிருப்பில் இடம்: அமைச்சர் ஆலோசனை

சென்னை - சத்தியவாணி முத்து நகர் மக்களுக்கு கே.பி.பார்க் குடியிருப்பில் இடம்: அமைச்சர் ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: சென்னை - சத்தியவாணி முத்து நகர் மக்களுக்கு கே.பி.பார்க் குடியிருப்பில் வீடுகள் அளிப்பது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 59-வது வார்டில் உள்ள சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா காந்தி நகர் பகுதியில் கூவம் நதிக் கரையோரம் வாழ்ந்து வந்த பொதுமக்களை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்ய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பில் தகுதியுடைய 2,092 குடும்பங்களுக்கு குடியிருப்பு ஆணை பெறப்பட்டு 1,914 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு பெரும்பாக்கம் குடியிருப்பில் குடியமர்த்தப்பட்டனர்.

மீதமுள்ள 178 குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்கள் வாழும் பகுதிக்கு அருகாமையிலேயே மறுகுடியமர்வு செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் உத்தரவின்பேரில், 178 குடும்பங்களுக்கு கே.பி.பார்க் பகுதி-2ல் திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியான கே.பி.பார்க் பகுதி-2ல் மறுகுடியமர்வு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன் முடிவில் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பொதுப்பணித்துறை, மின்துறை, சென்னை மாவட்ட வருவாய்த்துறை மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்து தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in