

சுகாதாரமற்ற உணவுகளே மனிதருக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன. கடந்த மாதம் கேரள மாநிலத்தில் சவர்மாவை சாப்பிட்ட ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிதாக பேசப்பட்டது. இவ்வாறு புதிய புதிய உணவுகள் வர வர உணவு பாதுகாப்பின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய உணவுப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7-ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "பாதுகாப்பான உணவே சிறந்த ஆரோக்கியம்“ என்ற கருப்பொருளோடு இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உணவுப் பாதுகாப்பு தினத்தையோட்டி இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் இந்திய அளவில் உணவு பாதுகாப்பு தர வரிசையை வெளியிடும். இதன்படி இந்தாண்டு உணவு பாதுகாப்பு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
2018-ம் ஆண்டு முதல் உணவு பாதுகாப்பு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. 5 நிலைகளில் உணவுப் பாதுகாப்பு துறையின் செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை, உணவுப் பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெறுபவர்களின் எண்ணிக்கை, உணவு சோதனை மற்றும் தொடர் ஆய்வுகள், உணவுப் பாதுகாப்பு தொடர்பாக துறை அலுவலர்களுக்கு பயிற்சி, நுகர்வோரின் பங்களிப்பு உள்ளிட்ட 5 நிலைகளில் ஆய்வு செய்து இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது.
2021-22 ஆண்டுக்கான தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் 2-வது இடமும், மகாராஷ்டிரா 3வது இடமும் பிடித்துள்ளது. முதல் இடத்தில் பிடித்த தமிழ்நாடு 82 மதிப்பெண்களையும், குஜராத் 77.5 மதிப்பெண்களையும், மகாராஷ்டிரா 70 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடமும், மணிப்பூர் 2வது இடமும், சிக்கிம் 3வது இடமும் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் ஜம்மு-காஷ்மீர் முதலிடமும், டெல்லி 2வது இடமும், சண்டிகர் 3வது இடமும் பிடித்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் 78.25 மதிப்பெண்களுடன் தமிழகம் 2வது இடம் பிடித்து இருந்தது. 2020-21 ஆம் ஆண்டு 64 மதிப்பெண்களுடன் தமிழகம் 3 வது இடம் பிடித்து இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்று முதல் இடம் பிடித்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.
2020 - 21ம் ஆண்டில் உணவு பாதுகாப்பு பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை நிலையில் 13, உணவு பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெறுபவர்களின் எண்ணிக்கை நிலை 20, உணவு சோதனை மற்றும் தொடர் ஆய்வு நிலையில் 11, உணவு பாதுகாப்பு தொடர்பாக துறை அலுவலர்களுக்கு பயிற்சி நிலையில் 4, நுகர்வோரின் பங்களிப்பு நிலையில் 16 என்று மொத்தம் 64 மதிப்பெண்களை தமிழகம் பெற்று இருந்தது.
2021 - 22ம் ஆண்டில் உணவு பாதுகாப்பு பணியாற்றும் அலுவலர்களின் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை நிலையில் 16.5, உணவு பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெறுபவர்களின் எண்ணிக்கை நிலை 21, உணவு சோதனை மற்றும் தொடர் ஆய்வு நிலையில் 17.5, உணவு பாதுகாப்பு தொடர்பாக துறை அலுவலர்களுக்கு பயிற்சி நிலையில் 10 நுகர்வோரின் பங்களிப்பு நிலையில் 17 என்று மொத்தம் 82 மதிப்பெண்களை தமிழகம் பெற்று இருந்தது.
உணவு சோதனை மற்றும் தொடர் ஆய்வு, உணவு பாதுகாப்பு தொடர்பாக துறை அலுவலர்களுக்கு பயிற்சி ஆகியவற்றில் 21ம் ஆண்டை விட 22ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தை பிடித்துள்ளது தமிழகம்.