

சென்னை: “தமிழக அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படவில்லை” என்று பள்ளிக் கல்வி துறை அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறை மூலம் எல்கேஜி, யூகேஜி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் நிர்வாகம் பள்ளிக் கல்வி துறையிடம் இருந்தாலும், அங்கன்வாடி மையங்களில்தான் இந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி தமிழகம் முழுவதும் 2,381 எல்கேஜி, யூகேஜி வகுப்பகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு முதல் எல்கேஜி, யூகேஜி மூடப்படுவதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வி அதிகாரிகள், "2,381 அங்கன்வாடிகளில் நடத்தப்பட்டு வரும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது. காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், சமூக நலத் துறை தொடர்ந்து எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை நடத்தும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்பவில்லை. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்.
பெற்றோர்கள் தங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் சேர்ந்துக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.