

நீலகிரி மாவட்டம் தெற்கு வனக் கோட்டம், பைக்காரா சரகத்துக்கு உட் பட்டது ‘வென்லாக் டவுன்ஸ்’ காப்புக் காடுகள். இதையொட்டி தோடர் பழங் குடியினர் வசிக்கும் நீர்காச்சி மந்து உள்ளது. இப் பகுதி ‘ஷூட்டிங் பாயிண்ட்’ என்றும் அழைக்கப்படு கிறது. பல திரைப்படங்களில் இந்த புல்வெளியில் பாடல் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு இப் பகுதியில் புல்வெளிகளை சிலர் உழுது, விவசாயம் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், ஆக்கிரமிப்புகளை தடுத்து அவர்களை எச்சரித்துள்ளனர்.
தெற்கு சரகர் ராஜேஷ் கூறும்போது, ‘வென்லாக் டவுன்ஸ்’ காப்புக் காடுகளையொட்டி தோடரின மக்களுக்கு சொந்தமான 33 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அவர்கள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவர் கள் நிலத்தை ஒட்டியுள்ள சுமார் 4 ஏக்கர் புல்வெளியை அகற்றி விவசாயம் மேற்கொள்ள முயன்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, அப் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளோம்.
தமிழகத்தில் வன உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படாத நிலையில், அந்த சட்டத்தை மேற்கோள்காட்டி தோடர் மற்றும் கோத்தர் மக்கள் வனங்களை ஆக்கிரமிப்பது தொடர்கிறது என்றார்.
பண்டைய பழங்குடிகள் நலச் சங்க நிர்வாகி வாசமல்லி கூறும் போது, ‘தோடர்கள் கால்நடை வளர்ப்பவர்கள். இப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள், நீரோடைகள் மற்றும் பைக்காரா அணையில் கலக்கின்றன.
இதனால் தண்ணீர் மாசடைந் துள்ளது. இந்த நீரை பருகும் கால்நடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டன. இதனால், தோடர் மக்கள் வாழ்வாதாரத்துக்கு விவசாயத்தையே நம்பியுள்ளனர். தற்போது ஆக்கிரமிப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது' என்றார்.