Last Updated : 17 May, 2016 12:37 PM

 

Published : 17 May 2016 12:37 PM
Last Updated : 17 May 2016 12:37 PM

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வில் 87.74% தேர்ச்சி: மாணவர் மார்டின் முதலிடம்

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 87.74 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி மாணவர் மார்டின் 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சட்டப்பேரவையிலுள்ள தனது அறையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.

புதுச்சேரி காரைக்கால் பிராந்தியங்களில் 14,285 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12,533 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 87.74. 2015ம் ஆண்டை விட 0.41 சதவீதம் குறைவு. கடந்த 2015ல் தேர்ச்சி விகிதம் 1.45 சதவீதம் குறைந்திருந்தது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம் புதுச்சேரியில் சரிந்துள்ளது.

நடப்பாண்டு மாணவிகளில் 90.95 சதவீதமும், மாணவர்களில் 83.93 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். வழக்கத்தைபோல் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர்.

பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி மாணவர் மார்டின் 1185 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். சங்கர வித்தியாலயா மாணவி காயத்ரி, காரைக்கால் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மீனா கதிஜா ஆகிய இருவரும் 1183 மதிப்பெண்களுடன் 2-ம் இடம் பிடித்தனர்.

அமலோர்பவம் மேனிலைப்பள்ளி புவனேஸ்வரி, செயின்ட் பேட்ரிக் மேனிலைப்பள்ளி அல்பர்டினா ஆகியோர் 1182 மதிப்பெண்களுடன் 3-ம் இடம் பிடித்தனர்.

புதுச்சேரியில் 34 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டு 35 பள்ளிகள் நூறு சத தேர்ச்சி பெற்றிருந்தன.

காரைக்கால் பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டு 4.3 சதவீதம் மொத்தமாக குறைந்திருந்தது. தற்போது மேலும் 0.65 சதவீதம் குறைந்து 85.88 ஆக உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் தேர்ச்சி விகிதம் கடந்த இரு ஆண்டுகளாக சரிவு நிலையில் உள்ளதாக கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x