Published : 07 Jun 2022 04:25 AM
Last Updated : 07 Jun 2022 04:25 AM
சென்னை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
தென்னிந்தியாவில் முதல்முறையாக, சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில், ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற பெயரில் ரூ.1 கோடி மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் வகையில் செயல் விளக்க மையமாக இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாற்றுத் திறனாளிகள் தடையற்ற சூழலுடன் வசிக்கக்கூடிய ‘மாதிரி இல்லம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டிலேயே முதல் முறையாக மாற்றுத் திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக ரூ.9.50 கோடி மதிப்பில் 7,219 பேர் பயன்பெறும் வகையில் 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் ஆகிய 5 வகையான உபகரணங்களில் 36 மாதிரிகளை அறிமுகப்படுத்தி, 6 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தபடி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று நேரத்தில் தடுப்பூசி செலுத்த பல்வேறு வசதிகளை செய்து மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அரசு கொடுத்தது. பிளஸ் 2 துணைத் தேர்வுகளை தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவித்தோம். மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வாங்க ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.70.76 கோடியில் 37,660 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,228 பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், ரூ.360.21 கோடி மதிப்பில் 2,11,505 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை என ஓராண்டில் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் அறிவித்துள்ளோம்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் கொடுத்தோம், கருவிகள் கொடுத்தோம், நிதி கொடுத்தோம் என்று மட்டும் சொல்லாமல், நம்பிக்கையும் கொடுத்தோம் என்று சொல்லும் அளவுக்கு இந்ததுறை செயல்பட வேண்டும். அது சாதாரண காரியமல்ல; அதற்கு இத்துறையின் அதிகாரிகள் முதல் சாதாரண அலுவலர் வரை அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். துறையை நோக்கி வரும் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்க வேண்டும். அவற்றை உடனடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், சில வாரங்களுக்குள்ளாவது நிறைவேற்றித் தரவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை இந்த அரசுதான். அந்த நம்பிக்கையை துறை அதிகாரிகளும், அலுவலர்களும்தான் காப்பாற்ற வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான UDID அட்டைகள் வழங்குவதில் உள்ள சுணக்கம் நீக்கப்பட்டு, அட்டை வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும். அவர்களுக்கான அனைத்து திட்டங்களும் தடையின்றி சென்றிட ஆங்காங்கே முகாம்கள் நடத்த வேண்டும். சுகாதாரம், குழந்தைகள் நலத் துறை, கல்வித் துறை ஆகியவை ஒருங்கிணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை அளிக்க வேண்டும்.
நலத் திட்டங்களுடன், உரிய வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும். பின்னடைவு பணியிடங்களை விரைவாக நிரப்புவதுடன், தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுந்த வேலை கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் இதுவரை எந்த அரசும் உருவாக்காத புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டும். அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மக்களின் வளர்ச்சி, என்ற திராவிட மாடலுக்குள் இது போன்ற விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சியும், மகிழ்ச்சியும்தான் அடங்கி இருக்கிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT