

திருவள்ளூர், நாமக்கல்லுக்கு 2, 3-வது இடம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டன. இதில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி வி.ஆர்த்தி, அதே பள்ளி மாணவர் கே.எச்.ஜஸ்வந்த் ஆகியோர் 1200-க்கு 1,195 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்தனர்.
திருவள்ளூர் நிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவி ஜி.பவித்ரா 1,194 மதிப்பெண் எடுத்து 2-ம் இடமும், நாமக்கல் எஸ்கேவி மேல்நிலைப் பள்ளி மாணவி வி.எஸ்.வேணுப்ரீத்தா 1,193 மதிப்பெண் எடுத்து 3-ம் இடமும் பெற்றனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடி வடைந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட் டன. அரசுத் தேர்வுகள் இயக் குநர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.
இந்த தேர்வில் மொத்தம் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். மாணவர்கள் 87.9 சத வீதமும், மாணவிகள் 94.4 சதவீ தமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி வீதமே அதிகம். மேலும், ஒட்டுமொத்த தேர்ச்சி வீதம் இந்த ஆண்டு 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இது 90.6 சதவீதமாக இருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வி.ஆர்த்தி, அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் கே.எச்.ஜஸ்வந்த் ஆகியோர் 1200-க்கு 1,195 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர். திருவள்ளூர் நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.பவித்ரா 1,194 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 2-ம் இடமும். நாமக்கல் எம்.கண்டம்பாளையம் எஸ்கேவி மேல்நிலைப்பள்ளி மாணவி வி.எஸ்.வேணுப்ரீத்தா 1,193 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்கள் 4 பேரும் தமிழ் மொழியை முதல் மொழிப்பாடமாக எடுத்தவர்கள்.
பிரெஞ்சு பாடத்தை முதல் மொழிப்பா டமாக எடுத்து 1,200-க்கு 1,195 மதிப்பெண் பெற்ற சென்னை நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.ஜெ.சத்ரியா கவின் ரேங்க் பட்டியலில் முதலிடம் பெற் றுள்ளார். அதே பள்ளி மாணவி எஸ்.ஸ்ருதி, பிரெஞ்சு பாடத்தை முதல் மொழிப்பாடமாக எடுத்து 1194 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும் கோவை சரவணம் பட்டி விமல்ஜோதி கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.சம்ரிதா (பிரெஞ்ச்), ஈரோடு திண்டல் பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜி.நவீன் (சமஸ்கிருதம்), சென்னை ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி என்.நிவேதிதா (சமஸ்கிருதம்) ஆகியோர் 1,193 மதிப்பெண் எடுத்து 3-வது ரேங்க் பெற்றுள்ளனர்.
200-க்கு 200
தேர்வு எழுதிய மாணவ, மாணவி களில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 463 பேர் 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 3,361 பேரும், வேதியியலில் 1,703, உயிரியலில் 775, தாவரவியலில் 20, விலங்கியலில் 10, இயற்பியலில் 5 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர்.