

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக விரைவில் நல்லதொரு சுமுகத் தீர்வு ஏற்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இந்தக் கோயிலின் கணக்குகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது. இதற்கு தீட்சிதர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேற்று காலை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவரை, தீட்சிதர்கள் வரவேற்றனர். அண்மையில் பொது தரிசனத்துக்காக அனுமதி வழங்கப்பட்ட கனகசபையில் (சிற்றம்பல மேடை) ஏறி நடராஜரை தரிசனம் செய்தார்.
பின் ஆயிரங்கால் மண்டபத்தில் தீட்சிதர்களுடன் அமர்ந்து, கோயில் நிர்வாகம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, “முதலில், கோயிலுக்கு ஆய்வு செய்ய வரும் குழுவுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள், எதையுமே தடுப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று அமைச்சர் அப்போது குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “இந்து அறநிலைத்துறை சட்டத் திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, யாருக்கும் சிறு மனக்கஷ்டம் கூட இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் முதல்வரின் அன்பான வேண்டுகோள். சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமாக நல்லதொரு சுமுகத் தீர்வு ஏற்படும் என எனக்குத் தோன்றுகிறது. இந்த ஆட்சி துலாக்கோல் போன்றது. அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் அரசாக செயல்பட்டு வருகிறது” என்றார்.
மதுரை ஆதீனம் கூறிய கருத்துகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர், “மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக தான் சார்ந்த செய்திகள் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என்பதற்காக பேசுகிறார். யாரோ ஒருவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஆதீனங்களையும், ஜீயர்களையும், தீட்சிதர்களையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல.
நேற்று முன்தினம் தருமபுரம் ஆதீனத்துக்கு சென்றிருந்தோம். அங்குள்ள ஆதீனம் நல்ல முறையில் உபசரித்தார். 26 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தொடங்கி வைத்தார். ஆதீனத்தின் சார்பில் கட்டப்பட்ட 24 அறைகளை என்னைக் கொண்டு திறக்கச் செய்தார். அனைவரும் தமிழக முதல்வரின் பக்கம்தான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.