

சென்னையில் சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் நடைபெற்று வருவதால், பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை தயாரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு நடத்திய பின்னர், ரயில் சேவை தொடங்குவற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இரண்டாவது வழித்தடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடுக்கு மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சின்னமலை - ஆலந்தூர் பரங்கிமலை விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதில், சின்னமலை ஓடிஏ (ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி) இடையே கடந்த 3 மாதங்களாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஓடிஏ விமான நிலையம் இடையே கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை வரையிலும் ஒட்டுமொத்த பணிகள் முடிக்கப்பட்டு, சோதனை ஒட்டம் நடத்துவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக மெட்ரோ ரயில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக முழு அறிக்கையை தயாரித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் அடுத்தகட்டமாக சின்னமலை பரங்கிமலை - ஓடிஏ விமான நிலையம் (10 கி.மீ) இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில், சின்னமலை விமான நிலையம் வரை கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. எனவே, தற்போது மேற்கொண்டுள்ள பணிகளை கொண்டு பாதுகாப்பு அறிக்கையை தயாரித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்ப உள்ளோம்.
அதன்படி, ஆணையர் வந்து ஆய்வு நடத்தி மேற்கண்ட வழித்தடத்தில் ரயில்சேவை தொடங்குவதற்கு ஓப்புதல் அளிப்பார். பின்னர், மெட்ரோ ரயில் சேவை தொடங்குவற்கான தேதி அறிவிக்கப்படும். பரங்கிமலையில் மின்சார ரயில் இணைப்பு, விமான நிலையமும் இருப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும், அதிகரிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.