Published : 07 Jun 2022 06:11 AM
Last Updated : 07 Jun 2022 06:11 AM
சென்னை: மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகிலுள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் மேம்பாலம் வரை உள்ள அடையாறு ஆற்றங்கரையோரம் இருபுறங்களிலும் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் திரு.வி.க.நகர் பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை அடையாற்றின் இரு கரையோரங்களிலும் 60,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை 36,820 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த மரக்கன்றுகளை பராமரிக்க ஏதுவாக சொட்டு நீர்ப்பாசன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் அடையாறு ஆற்றின் இருபுறங்களிலும் ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றி அவ்விடங்களில் பாரம்பரிய மரக்கன்றுகள், செடிகள் மற்றும் மூலிகைச் செடிகளை நடவு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றின் நீர் செல்லும் பாதையான மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை இடதுபுறத்தில் 3.9 கி.மீ. நீளத்தில் 16,955 ச.அ. பரப்பளவுள்ள இடத்தில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் 2,512 நாட்டு மரக்கன்றுகள், 2,512 செடிகள், 2,512 மூலிகைச் செடிகள் என மொத்தம் 7,536 கன்றுகளை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடையாறு ஆற்றின் வலதுபுறத்தில் 4 கி.மீ. நீளத்தில் 13,312 ச.அ. பரப்பளவுள்ள இடத்தில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் 1,972 நாட்டு மரக்கன்றுகள், 1,974 செடிகள், 1,974 மூலிகைச் செடிகள் என மொத்தம் 5,920 கன்றுகளை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT