

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தும் பணியை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தம் ஏரியை ஆழப்படுத்தி, கொள்ளவை உயர்த்தும் பணி மற்றும் ஏரியின் கலங்கள் மறுவடிவமைக்கப்பட்டு உபரிநீர் போக்கியாக கட்டமைக்கும் பணி நேற்று தொடங்கின.
இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமை தாங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுராந்தகம் ஏரி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி 1,058 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் 7,604 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரி கடந்த 60 ஆண்டுகளாக தூர்வாரப்படாததாலும், நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்டு வரும் மண் அரிப்பால் ஏரியில் வண்டல் மண் படித்தும் சுமார் 24 சதவீதம் கொள்ளளவு குறைந்துள்ளது.
இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்று மதுராந்தகம் தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி ஏரியை தூர்வாரவும், கரைகளை பலப்படுத்தவும், ஏரியில் படித்துள்ள வண்டல் மண்ணைக் கொண்டு ஏரியின் அருகிலுள்ள தாழ் நிலங்களை சுமார் 1.5 அடிக்கு உயர்த்தவும், தற்போது உள்ள ஏரியின் கொள்ளளவான 530 எம்சிஎப்சியில் இருந்து உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏரியின் தற்போதுஉள்ள நீர்த்தேக்க ஆழமான 23.30அடியிலிருந்து 24.94 அடியாக உயர்த்தும் விதமாகவும், ஏரியின்கலங்கள் மறு வடிமைக்கப்பட்டு, 12 கதவுகளுடன் கூடிய வெள்ள உபரிநீர் போக்கியாக மீண்டும் கட்டப்படவும் உள்ளது.
மேலும், ஏரியின் மதகுகள் மற்றும் வரத்து கால்வாய்கள் மேம்படுத்தப்படவுள்ளன. ஆழப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் மண்ணின் ஒரு பகுதி, ஏரியின் கரைகளை பலப்படுத்தவும், ஏரியின் முழு கொள்ளளவு மட்டத்தை உயர்த்துவதால், அருகிலுள்ள தாழ் நிலங்கள் பாதிக்காத வண்ணம், நிலமட்டத்தை உயர்த்தவும் மண்ணின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் ஏரியைச் சுற்றியுள்ள விளைநிலங்கள் நீரில் முழ்குவது தடுக்கப்படும். மேலும், 38 கிராமங்களில் குடிநீர் வசதி உறுதிப்படுத்தப்படுவதுடன், 3,500 விவசாய குடும்பங்கள், 9,000 விவசாய பணியாளர்கள் பயன் அடைவார்கள். இந்தப் பணியை 24 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மதுராந்தகம் நகர் மன்றத் தலைவர் மலர்விழி குமார், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை கண்காணிப்பு பொறியாளர் அ.முத்தையா, செயற்பொறியாளர் கே.செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் ஆ.சுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் க.குமார், விவசாய பெருமக்கள், உள்ளாட்சி பிரிதநிதிகள் பலர் பங்கேற்றனர்.