உட்கட்சிப் பிரச்சினையில் களம் காணும் அதிமுக, திமுக வேட்பாளர்கள்: கோவை வடக்கில் வெல்பவர் யார்?

உட்கட்சிப் பிரச்சினையில் களம் காணும் அதிமுக, திமுக வேட்பாளர்கள்: கோவை வடக்கில் வெல்பவர் யார்?
Updated on
2 min read

தொகுதி மறுசீரமைப்பின்போது உருவான புதிய தொகுதி கோவை வடக்கு. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதி, காந்தி மாநகர் உள்ளிட்ட பகுதிகளுடன், 2011-ம் ஆண்டு மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளையும் இணைத்து இத்தொகுதி உருவாக்கப்பட்டது.

சிறு, குறு தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதியாகவும், பல தரப்பட்ட மக்களை உள்ளடக்கிய பகுதியாகவும் அறியப்பட்டது இந்த தொகுதி. அதிகளவில் கவுண்டர் சமூக மக்களும், அடுத்தபடியாக போயர்கள், அருந்ததியர்கள் வசிக்கும் தொகுதியாகவும் உள்ளது.

இத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 2011-ம் ஆண்டில் அதிமுக வேட்பாளர் தா.மலரவன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.வீரகோபாலை காட்டிலும் 40 ஆயிரத்து 98 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள் சற்று குறைவாகவே காணப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் என்பது பிரதான பிரச்சினை. மாநகராட்சியில் இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்கட்டமைப்பு வசதிகள் சரிவர முடிவடையவில்லை.

முன்னர் இருந்த மின்வெட்டு பிரச்சினையால், இத் தொகுதியின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்கள் பணியாணை (ஜாப்ஆர்டர்) குறைவினால் உற்பத்தி இழப்பை சந்தித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் தொழில்வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த தொகுதியின் பிரதான பிரச்சினை. இத் தேர்தலில், இப் பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும் என கணிக்கப்படுகிறது. தற்போது, இந்த தொகுதியில் அதிமுக சார்பில் பி.ஆர்.ஜி.அருண்குமார், திமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி கவுன்சிலர் மீனா லோகு ஆகியோருக்கு இடையைதான் கடும் போட்டி உள்ளது.

அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவராக 3 முறை தேர்வு செய்யப்பட்டவர். இருப்பினும், புறநகரில் உள்ளவர் நகரின் மையப் பகுதியில் உள்ள தொகுதியில் போட்டியிட வைத்ததை இங்குள்ள அதிமுகவினரே விரும்பவில்லை என்பதை இங்கு ஒலிக்கும் அதிருப்திகளின் வாயிலாக காணமுடிகிறது. தொழில் ரீதியில் திமுகவினருடன் நெருக்கம் பாராட்டுபவர் என கார்டன் வரையில் மனுக்களை அனுப்பியும் பார்த்துள்ளனர். அமைச்சரின் ஆதரவாளர் என்ற ரீதியில் அடுத்தடுத்து மாநகர் மாவட்டச் செயலாளர் வரை வேகமாக உருவெடுத்துவிட்ட இவரை தோற்கடித்தால் அவரின் கட்சிப் பொறுப்பையும் மாற்றலாம் என்று கட்சிக்குள் உள்ளடி வேலை நிறைய நடக்கிறது. அதேபோல் செலவு விஷயத்திலும் கட்சிக்காரர்களை இவர் திருப்தி செய்ய முடியவில்லை என்பதையும் காணமுடிகிறது.

திமுக சார்பில் போட்டியிடும் மீனா லோகு, மாநகராட்சி கவுன்சிலராக இருந்து பரிச்சயம் ஆனாவர். மாநகராட்சி பிரச்சினைகளில் தடாலடியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி, மீடியாக்களில் வலம் வந்து கட்சித் தலைமையின் கவனத்தை பெற்றவர்.

அதனால், வேட்பாளர் அளவுக்கு வந்துள்ளார். வடக்கு தொகுதிக்காக மனுதாக்கல் செய்த வடக்கு மாவட்டச் செயலாளர் வீரகோபால் உட்பட திமுகவின் பல்வேறு சீனியர்களையே ஓரம் கட்டி விட்டார். எனவே, பெரும்பாலான கட்சி நிர்வாகிகளின் அதிருப்திகளை சம்பாதித்திருந்தாலும், கட்சியின் அடுத்த நிலை தொண்டர்களை பிரச்சாரத்தில் முழு ஈடுபாடு காட்ட வைத்திருக்கிறார்.

இப்படி உட்கட்சி பிரச்சினைகளிலும் சரி, மக்கள் பிரச்சினைகளிலும் சரி அதிமுக, திமுகவுக்கு பலமான போட்டி இருப்பதுபோல், வெற்றி தோல்வியை கணிப்பதிலும் சரி சம போட்டி இருப்பதை தொகுதிக்குள் காண முடிகிறது.

இவர்களுக்கு அடுத்தபடியாகவே தேமுதிக எஸ்.எம்.முருகேசன், பாஜக எஸ்.தேவராஜ் ஆகியோர் தேர்தல் ரேசில் ஓடி வருகின்றனர். ஆனால் முந்தைய இரண்டு வேட்பாளர்களுக்கும், பிந்தைய இந்த வேட்பாளர்களுக்குமான தூர இடைவெளி மிக அதிகமாகவே இருப்பதைக் காண முடிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in