அமைச்சரவை பதவியேற்பு கோலாகல விழா துளிகள்

அமைச்சரவை பதவியேற்பு கோலாகல விழா துளிகள்
Updated on
3 min read

# 6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென் தமிழகத்திலிருந்து ஏராளமான அதிமுகவினர் நேற்று முன் தினம் மாலையே சென்னையை நோக்கி படையெடுத்தனர்.

# சென்னை பல்கலைக்கழகத்தை நோக்கி நேற்று காலை 6 மணிக்கே அதிமுகவினர் வரத் தொடங்கியதால், பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

# பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , 14 திமுக எம்எல்ஏக்களோடு காலை 11.40-க்கு விழா அரங்கத்துக்கு வந்தார். அதிமுக எம்எல்ஏக்கள் அமர்ந்த பகுதியில் பின் வரிசையில் அவர்கள் அமர வைக்கப்பட்டனர். விழா முடிந்ததும் அவர்கள் உடனடியாக எழுந்து சென்றுவிட்டனர்.

பதவிப் பிரமாணம் செய்துவைத்த பிறகு, ஜெயலலிதாவுக்கு மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்துகிறார் ஆளுநர் கே.ரோசய்யா.

# முதல்வர் ஜெயலலிதா வீட்டில் இருந்து புறப்படும்போது மகளிர் அமைப்பு சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

# காரில் இருந்த ஜெயலலிதா, சாலையின் இருபுறமும் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தவாறே சென்னை பல்கலைக்கழகத்துக்குள் சென்றார்.

# சாலைகளின் ஓரத்தில் ஆங்காங்கே பேண்டு வாத்தியங்கள், கேரள செண்டை மேளம், கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முதல்வர் பதவியேற்றுக் கொண்ட பிறகு, 28 அமைச்சர்களும் இரு குழுக்களாக பதவியேற்றனர். அவர்களுக்கும் ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

# காலை 11 மணிக்கு மேல் வாலாஜா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

# முதல்வர் பதவியேற்கும் நிகழ்ச்சியை பொதுமக்கள் காணும் வகையில் பெல்ஸ் சாலையிலும், சென்னை பல்கலைக்கழகம் நுழைவு வாயில் பகுதியிலும் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு திரையிடப்பட்டன.

# புதிதாக பதவியேற்ற 28 அமைச்சர்களுக்கான சைரன் பொருத்திய கார்கள், சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகே வரிசையாத நிறுத்தப்பட்டிருந்தன.

# அதிமுக நிகழ்ச்சிகள் என்றாலே பேனர்களும், கொடிகளும் பெருமளவில் சாலைகளில் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்றைய பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, பேனர்களும், கொடிகளும் அதிகமாக வைக்கப்படவில்லை.

# முதல் வரிசையில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவே நாடாளுமன்ற துணை தலைவர் மு.தம்பிதுரை அமர்ந்திருந்தார்.

விழாவுக்கு வந்திருந்த பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு வணக்கம் தெரிவிக்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். உடன் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

# மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அமர்ந்திருந்தார்.

# சொத்துக் குவிப்பு வழக்கில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, சரியாக ஒராண்டுக்கு முன்பு மே 23-ம் தேதிதான் 5-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். இப்போது, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின், அதே தேதியில் 6-வது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

# கடந்த முறை மே 23-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றபோது, அமைச்சர்கள் இரு குழுக்களாக பதவியேற்றது போல் இந்த முறையும் பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தொழிலதிபர்கள், திரைத்துறையினர், முக்கியப் பிரமுகர்கள்.

# கடந்த ஆட்சியில் முதல்வருக்கு அடுத்த அதிகார மையாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் நடிகர், நடிகைகள் அமர்ந்த பகுதியில் பின் வரிசையில் தனியாக அமர்ந்திருந்தனர்.

# முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் எம்எல்ஏக்கள் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்.

# அரங்குக்குள் கடைசியாக வந்த அதிகாரிகள், எம்எல்ஏக்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அதன் பின், பொதுத்துறை அதிகாரிகள் ஆங்காங்கே அமர்ந்திருந்த சிலரை எழுப்பிவிட்டு, நின்று கொண்டிருந்தவர்களை அமரச் செய்தனர்.

# மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் வந்தபோது வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் முண்டியடித்துக் கொண்டு அவர்களை படம் பிடித்தனர். முதல்வர் வரும் நேரம் என்பதால், போலீஸார் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்தினர்.

திமுக எம்எல்ஏக்களுடன் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின்.

ஜெயலலிதாவுக்கு தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துளனர்.

ட்விட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

ஜெயலலிதாவும் அவருடைய அமைச்சர்களும் உறுதிமொழி எடுத் துக் கொண்டதை முன்னிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு புதிய அரசுடன் நெருங்கி செயல்படும்.

ஹமீத் அன்சாரி, ராஜ்நாத் சிங்

தமிழக முதல்வராக 6-வது முறை யாக பதவியேற்றுள்ள ஜெயலலிதா வுக்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஸ்டாலின்

தமிழக முதல்வராக 6-வது முறையாக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரி வித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் 14 எம்எல்ஏக் கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், நேற்று தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ‘இன்று தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றேன். அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் வாழ்த்துக்கள். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் தமிழக மக்களுக்காக கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன். வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குகிறது; ஜூன் 3-ல் பேரவைத் தலைவர் தேர்தல்

புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பேரவைத் தலைவர் செம்மலை முன்னிலையில் உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள். இதனையடுத்து ஜூன் 3-ம் தேதி பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in