

சேலம்: ஈரோடு சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் விதிமீறல் கண்டறியப்பட்டால் தொடர்புடைய மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக சிறுமியின் தாய், அவரது இரண்டாவது கணவர் உட்பட நான்கு பேரை ஈரோடு போலீசார் கைது செய்து அவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதாரத் துறை சார்பில் இணை இயக்குநர் விஸ்வநாதன், மருத்துவர் கமலக்கண்ணன், ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் கோமதி, மகப்பேறு மருத்துவர் மலர்விழி, கதிரவன் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மற்றும் பெருந்துறை மருத்துவமனைகளில் நேற்று விசாரணை நடத்திய மருத்துவக் குழுவினர். காப்பகத்தில் உள்ள பாதிக்கப்பட்டச் சிறுமியிடமும் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை சேலத்தில் உள்ள சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பிருந்தாவனம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் விஸ்வநாதன் கூறியது: "16 வயது சிறுமியிடம் கருமுட்டையை பெற்று விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. இதனடிப்படையில் சிறுமியிடம் நாங்கள் வாக்குமூலம் பெற்றோம். அந்த வாக்குமூலத்தில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கருமுட்டைகளை எடுத்ததாக அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சிறுமி கூறிய மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஈரோடு, பெருந்துறையில் ஆய்வு நடத்தினோம்.
சேலம் மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை சரிபார்த்து வருகிறோம். இதில் தவறு செய்திருப்பது உறுதியானால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்தச் சிறுமி ஆந்திரா மற்றும் கேரளாவிற்கும் தன்னை அழைத்துச் சென்றதாக கூறியிருக்கிறார். எனவே, அதன் அடிப்படையிலும் விசாரணை நடக்கும். மருத்துவமனைகளில் சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட கருமுட்டைகள் ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
பெண்ணின் திருமண வயது 18 ஆக இருந்ததை தற்போது 21- ஆக அதிகரித்து உள்ளனர். எனவே 21 வயதுக்கு மேல் உள்ளவர்களிடம் மட்டும்தான் சட்டத்திற்கு உட்பட்டு அவர்களின் அனுமதியோடு கருமுட்டை எடுக்க வேண்டும். ஆனால், இந்த சிறுமியிடம் 14 வயது முதலே கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு 16 வயது ஆகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் குற்றம் கண்டு பிடிக்கப்பட்டால் , அந்த மருத்துவமனை மீது மருத்துவச் சட்டங்களுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.