“தாத்தா, மகன், பேரன்... வாரிசு அரசியல் செய்வதுதான் திராவிட மாடலா?” - ஆர்.பி.உதயகுமார்

“தாத்தா, மகன், பேரன்... வாரிசு அரசியல் செய்வதுதான் திராவிட மாடலா?” - ஆர்.பி.உதயகுமார்
Updated on
1 min read

மதுரை: ''உதயநிதியை முன்னிலைப்படுத்துவதுதான் திமுகவின் திராவிட மாடலா,'' என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருவேடகத்தில் கிளை நிர்வாகிகளுக்கு தீர்மானம் புத்தகம் வழங்கும் விழா மற்றும் டிஜிட்டல் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பேசியது: ''கருணாநிதி குடும்ப ஆதிக்கத்தின் பிடியிலிருந்து ஏழை எளிய மக்களை காப்பாற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார்.

இந்த 50 ஆண்டு கால வரலாற்றில் மக்களுக்கு பல்வேறு வரலாற்று திட்டங்களை அதிமுக செயல்படுத்தி இருக்கிறது. தற்போது ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் வலுவான சிறந்த எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஒரு மாயதோற்றத்தை உருவாக்கவே தற்போது திமுகவினர் திராவிட மாடல் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். அவர்களின் திராவிட மாடல் பயிற்சி என்பது உதயநிதியை முன்னிலைப்படுத்தும் பயிற்சியாகவே உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? தாத்தா, மகன், பேரன் என்று வாரிசு அரசியல் செய்வதுதான் திராவிட மாடலா? தந்தை பெரியார், அண்ணாத்துரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வாரிசு அரசியல் செய்யவில்லை.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது திமுக மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வைத்துள்ளார். ஆனால், இதுவரை முதல்வர் விளக்கம் சொல்ல முன்வரவில்லை. திமுக ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சியாகும்.

இந்த அரசின் மீது மக்கள் கடுமையான வெறுப்பில் உள்ளனர். எப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கும் நிலை உள்ளது. திமுக தொண்டர்களே திமுக மீது அதிருப்தி அடைந்துள்ளனர்'' என்று அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in