

சென்னை: "மோடி ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஆதீனம் பேசுவது, ஆன்மிகப் பணியல்ல, அது ஆர்எஸ்எஸ் பணி" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆதீனம் அரசியல் பேசுவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் இஸ்லாமியர்களை குறிப்பிட்டு தேச விரோதிகள் என்பது என்ன விதமான அரசியல்? மோடி ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஆதீனம் பேசுவது, ஆன்மிகப் பணியல்ல, அது ஆர்எஸ்எஸ் பணி" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக,விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் துறவியர் மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தலைமை வகித்தார்.
மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலை வகித்து பேசும்போது, “தமிழ்நாட்டில் பண்பாடு, கலாசாரம் கோயில்களில்தான் உள்ளது. திராவிட அரசியல் பேசுபவர்கள் கோயில்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர்.
கோயிலுக்கு குத்தகை பாக்கி உள்ளது. கோயில் இடங்களில் கடை கள் வைத்திருப்பவர்கள் வாடகை கொடுப்பதில்லை. மதுரை ஆதீனத்துக் குட்பட்ட ஒவ்வொரு கோயிலிலும் ரூ.21 லட்சம் குத்தகை பாக்கி இருக்கிறது.
கிறிஸ்தவ, முஸ்லிம் புனித தலத்துக்கு செல்வதற்கு இலவசம் அறிவிக்கும் அரசு, இந்துக் கோயில்களில் மட்டுமே தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கின்றனர். வரும் தேர்தலில் இந்துக்கள் கயிலாயம் செல்வதற்கு இலவசம் என்பவர்களுக்கே நமது ஓட்டு” என்று அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.