Published : 06 Jun 2022 07:05 PM
Last Updated : 06 Jun 2022 07:05 PM

பெண் சிசுக்கொலை, கருமுட்டை வணிகத்தை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கடிதம்

கே.பாலகிருஷ்ணன் | மு.க.ஸ்டாலின்

சென்னை: “தமிழகத்தில் அதிகரிக்கும் பெண் சிசுக்கொலை மற்றும் கருமுட்டை விற்பனையைத் தடுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில் "தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக பாலினத் தேர்வின் அடிப்படையில் பெண் கருக்கலைப்பு நடந்துள்ளதாகவும், 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஸ்கேன் மையங்கள், மருத்துவர்கள் உட்பட அனைத்து அமைப்புகளையும் கண்காணிப்பதற்கு சட்டம் வழிவகை செய்தாலும் இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன.

அடுத்து ஈரோடு மாவட்டத்தில் கருமுட்டை வணிகம் நடந்த செய்திகள் வெளிவந்துள்ளன. 16 வயது சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டு, நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், அந்தச் சிறுமியின் தாயும் ஈடுபட்டுள்ளார். இதிலும் அரசின் சார்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது பற்றிய செய்திகள் வெளிவருவது குறைவாக இருந்தாலும் கருமுட்டை வணிகம் பரவலாக நடப்பதாகவே தகவல்கள் வருகின்றன. வணிக ரீதியான வாடகை கர்ப்பப்பை முறை தடை செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை வணிகம் குறித்து சட்டங்கள் எதுவும் இல்லாத சூழலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஈரோடு சம்பவத்தில் வழிகாட்டுதலின் எந்த அம்சமும் பின்பற்றப்படவில்லை.

இந்தியாவிலும், தமிழகத்திலும் செயற்கைமுறை கருத்தரிப்பு மையங்கள் ஏராளமாக நிறுவப்பட்டு வருகின்றன. மருத்துவ சுற்றுலா மையமாக இந்தியா விளங்குவதால் சட்ட விரோதமாக கருமுட்டை விற்பனை அதிகரித்திருக்கிறது.

கருமுட்டை வணிகம் என்பது பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் கடுமையான சுரண்டல் மற்றும் வன்முறையாகும். செயற்கை ஹார்மோன்கள் செலுத்தப்பட்டு இயல்புக்கு கூடுதலாக கருமுட்டைகள் எடுக்கப்படுவதால் பெண்ணின் உடல் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறது. குடும்ப வறுமை இச்சுரண்டல் வலையில் விழ வைக்கிறது. குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் நடவடிக்கைகள் எடுப்பது ஒருபுறமிருந்தாலும், இவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் தேவைப்படுகின்றன.

எனவே, கருவின் பாலினம் அறிவித்தல், பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தை ழுமையாக தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். அதைக் கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்களை புனரமைத்து, அவற்றை முறையாக இயங்க வைக்க வேண்டும். பெண் கரு கொலையை தடுக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பெண் சிசு, கரு கொலை அதிகம் நடக்கும் மாவட்டங்களில் கூடுதல் கவனத்துடன் கொண்டு செல்ல வேண்டும். பெண்கள் அமைப்புகள், தன்னார்வக்குழுக்கள் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பெண் சிசு, கரு கொலைக்கும், கருமுட்டை விற்பனைக்கும் காரணமாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள், ஸ்கேன் சென்டர் உரிமையாளர் ஆகியோர் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். கருமுட்டை விற்பனையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து, அச்சிறுமிக்கு கல்வி புகட்டி அவளது எதிர்கால வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள தங்களின் மேலான தலையீடு வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x