Last Updated : 21 May, 2016 08:36 AM

 

Published : 21 May 2016 08:36 AM
Last Updated : 21 May 2016 08:36 AM

1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி வாய்ப்பை பறிகொடுத்த திமுக

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 1.1 சதவீதம் அதாவது 4 லட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக பறிகொடுத்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என 98 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

திமுக அணியில், திமுக 1 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 511 வாக்குகள் (31.6 சதவீதம்), காங்கிரஸ் 27 லட்சத்து 74 ஆயிரத்து 75 வாக்குகள் (6.4 சதவீதம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 லட்சத்து 13 ஆயிரத்து 808 வாக்குகள் ( 0.7 சதவீதம்), புதிய தமிழகம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 830 (0.5 சதவீதம்), மனிதநேய மக்கள் கட்சி 1 லட்சத்து 97 ஆயிரத்து 150 (0.5 சதவீதம்) என மொத்தம் 39.7 சதவீதம் அதாவது 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகளைப் பெற்றுள்ளன.

நூலிழையில் பறிபோனது

அதிமுக அணி 40.8 சதவீதம் அதாவது 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து 60 வாக்குளைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணியை விட அதிமுக 4 லட்சத்து 41 ஆயிரத்து 646 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது. அதாவது 1.1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக பறிகொடுத்துள்ளது.

திமுகவின் தேர்தல் வரலாறு

திராவிடர் கழகத்திலிருந்து வெளி யேறிய அண்ணா 17-9-1949-ல் திமுகவை தொடங்கினார். 1957 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய திமுக 15 தொகுதிகளில் வென்றதுடன் 17 லட்சம் வாக்குகளைப் பெற்று அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற் படுத்தியது.

அதன்பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவின் வெற்றி பயணம் தொடர்ந்தது. 1962-ல் 50 இடங்களில் வென்ற திமுக 27.10 சதவீதம் அதாவது 34 லட்சத்து 35 ஆயிரத்து 633 வாக்குகளைப் பெற்றது.

1967-ல் 40.69 சதவீத வாக்குகளுடன் 137 இடங்களில் வென்ற திமுக காங்கிரஸை வீழ்த்தி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. 6-3-1967-ல் அண்ணா முதல்வரானார்.

1971 தேர்தலில் கருணாநிதி தலைமை யில் முதல் முறையாக தேர்தலைச் சந்தித்த திமுக 48.58 சதவீதம் வாக்குகளுடன் 184 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

1977-ல் எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 1977, 1980, 1984 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சியாக திமுக இருந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1989-ல் 150 இடங்களில் திமுக வெற்றி பெற்று 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு 1991-ல் நடை பெற்ற தேர்தலில் 22.46 சதவீத வாக்கு களைப் பெற்று திமுக படுதோல்வி அடைந்தது. 1996-ல் 42.07 சதவீத வாக்குகளுடன் 173 இடங்களில் வென்று திமுக ஆட்சி அமைத்தது.

2001-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை இழந்த திமுக, 2006-ல் 98 இடங்களில் மட்டுமே வென் றாலும் காங்கிரஸ், பாமக துணையுடன் ஆட்சி அமைத்தது.

2011-ல் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை இழந்த திமுக 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் என தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x