

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் இரண்டரை மணி நேரம் ஆட்சியர் பா.முருகேஷ் தாமதமாக வந்ததால் கூட்ட நெரிசல் அதிகரித்து மக்கள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) கடந்த 3-ம் தேதி தொடங்கியது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில், 2-வது நாளான 6-ம் தேதி (இன்று), திருவண்ணாமலை நகரம் மற்றும் ஆடையூர், வேங்கிக்கால், அடி அண்ணாமலை, அய்யம்பாளையம், அத்தியந்தல், ஆணாய்பிறந்தான், காவேரியாம்பூண்டி, கனத்தம்பூண்டி உட்பட 24 கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு இன்று காலை 8 மணியில் இருந்து மக்கள் வர தொடங்கினர். ஆட்சியரிடம் காலை 10 மணி முதல் மனுக்களை கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், ஆட்சியர் வருவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால், மக்களின் கூட்டம் அதிகரித்தது. 150-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அவர்களில் பெரும்பாலனவர்கள், ஆட்சியரின் வருகை குறித்து, வருவாய் துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு இரண்டரை மணி நேரம் தாமதமாக பகல் 12.25 மணிக்கு ஆட்சியர் பா.முருகேஷ் வந்து சேர்ந்தார். அவரை, வருவாய்த் துறையினர் வரவேற்றனர். பின்னர அவர், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முதலில், திருவண்ணாமலை நகரைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர். பின்னர், 24 கிராம மக்கள் அழைக்கப்பட்டனர். அப்போது, அனைவரும் முண்டியத்து சென்று வரிசையில் நின்றதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. வட்டாட்சியர் அலுவலகம் அருகே கிழக்கு காவல் நிலையம் இருந்தபோதும், கூட்டத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினர் வரவில்லை. வருவாய் துறை ஊழியர்களே, மிகுந்த சிரமப்பட்டு மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்தனர்.
கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறையினர் எச்சரித்து வருவதால், குறித்த நேரத்தில் மனுக்களை பெற்று, கூட்ட நெரிசலை தவிர்க்க ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, ''ஜமாபந்தி நடைபெறும் இடங்களில் மக்களை வரிசைப்படுத்தி அனுப்பி வைத்து, அவர்களது பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். மேலும் கழிப்பிடம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியர் வருகை தாமதத்திற்கான காரணம்: இது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்ட போது, ''திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வந்த பிரதாப், கோவை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது தலைமையில் செயல்பட்டு வந்த ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட பணிகள் தேக்கமடைந்துள்ளது.
தற்போது, ஊரக வளர்ச்சி முகமையின் பொறுப்பு அதிகாரியாக உள்ள ஆட்சியர், தேக்கமடைந்துள்ள பணிகளை விரைவுப்படுத்துவதற்கான கூட்டத்தை, ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடத்தினார். இக்கூட்டத்தில், திட்ட பணிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, அதனை விரைவாக செயல்படுத்த துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், ஜமாபந்தியில் பங்கேற்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது'' என தெரிவித்தனர்.