

தருமபுரி: ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஒகேனக்கல் களைகட்டியது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை விநாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால், பிரதான அருவியில் மிதமான வேகத்தில் தண்ணீர் விழுந்தது. மேலும், ஆற்றில் நீரின் இழுவை குறைவாக இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை முதல் ஒகேனக்கல்லுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வார இறுதிநாள் என்பதாலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் ஒகேனக்கல்லுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகரித்து இருந்தது. இதனால், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பரிசல் பயணம்
சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் பரிசலில் பயணித்து காவிரியாற்றின் பல்வேறு பகுதிகளையும் கண்டு ரசித்தனர். அதேபோல, எண்ணெய் மசாஜ் செய்து பிரதான அருவி மற்றும் ஆற்றில் பலர் குளித்து மகிழ்ந்தனர். அதேபோல, தொங்கும் பாலம், முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களையும் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
பயணிகள் வருகை அதிகரித்ததால், அங்குள்ள உணவகங்கள், கடைகள் போன்றவற்றில் விறுவிறுப்பான வர்த்தக சுழற்சி நடந்தது. இதுதவிர, கிராமப்புற பெண்கள் மீன் குழம்புடன் உணவு சமைத்து தரும் பகுதியான சமையல்கூட பகுதி முழுவதும் நேற்று மிகுந்த பரபரப்புடன் இருந்தது.
போலீஸ் கண்காணிப்பு
கூட்டம் அதிகமாக இருந்ததால் திருட்டு, நெரிசல், அசம்பாவிதங்கள் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் ஒகேனக்கல் போலீஸார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசலில் பயணித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.