Last Updated : 06 Jun, 2022 04:32 PM

 

Published : 06 Jun 2022 04:32 PM
Last Updated : 06 Jun 2022 04:32 PM

“கலாசார சீர்கேடுகளை புதுச்சேரி அரசு அனுமதிக்காது” - ஆளுநர் தமிழிசை உறுதி

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப்படம்

புதுச்சேரி: “கலாசார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது” என்று சென்னை - புதுச்சேரி இடையே சொகுசு கப்பல் விவகாரத்தில் ஆளுநர் தமிழிசை உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரியில் தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் கடற்படைப் பிரிவு மாணவர்களின், கடல் சாகசப் பயணம் இன்று தொடங்கியது. புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொடங்கிய மாணவர்கள் கடல் சாகசப் படகு பயணத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கடல் சாகசப் பயணத்தில், புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த, தேர்வு செய்யப்பட்ட 60 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு, புதுச்சேரியிலிருந்து படகில் பயணத்தைத் தொடங்கினர்.

இந்தக்குழு 300 கிமீ கடற்பயணமாக புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, கடல் மார்க்கமாக காரைக்காலை சென்றடைந்து, மீண்டும் அங்கிருந்து புதுச்சேரியை வந்தடையும், இடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொள்ளும்.

நிகழ்ச்சிக்கு பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: ''கடல் சாகசப் பயணத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள், கடல் பயணம் செல்வது மட்டுமல்லாமல், கடல்கரையோர கிராமங்களில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரத்த தான முகாமில் கலந்துகொள்ளுதல், மரங்கள் நடுதல், கடற்கரையை தூய்மைப்படுத்துதல், விழிப்புணர்வு பேரணிகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்களில் ஈடுபட உள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தக் கடல் பயணக்குழவில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்வதும் மகிழ்ச்சி. அவர்கள் பிற பெண்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர். 20 நாட்களுக்கும் மேலாக, 25 பெண்கள் கடற்பயணம் செய்யும்போது, பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிக பாதுகாப்பும் தேவைப்படும். மாணவர்களுக்கு நமது கடற்படை, உறுதுணையாக உள்ளது. குடியரசு தினத்தில் பிரதமரின் கரங்களால் வழங்கப்படும் சிறந்த அணிவகுப்பிற்கான கோப்பையை, புதுச்சேரி கடற்படைப் பிரிவு பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

புதுச்சேரியில் ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், கடந்த சில தினங்களாக பொது இடங்களில், பல லட்சம் எண்ணிக்கையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக் பூமிக்கு மிகவும் பாரமாக இருக்கிறது. சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் சூழலில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும். அது தொடர்பாகவும், இந்த மாணவர்கள் குழு, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

அப்போது, சென்னை-புதுச்சேரி இடையே சொகுசு சுற்றுலா கப்பல் ஒன்று இயக்கப்படுவது குறித்தும், அதில் சூதாட்டம் போன்ற கலாசார நிகழ்வுகள் நடப்பதாக புகார் எழுவது குறித்தும் ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ''அது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு எந்த தகவலும் இல்லை. அதுதொடர்பாக கோப்பும் வரவில்லை. அப்படியே கப்பல் புதுச்சேரிக்கு வந்தாலும், கலாசார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது'' என்று ஆளுநர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x