Published : 06 Jun 2022 07:12 AM
Last Updated : 06 Jun 2022 07:12 AM

தமிழகத்தில் முதல்முறையாக 12 பேருக்கு பிஏ வகை ஒமைக்ரான் : சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக 8 பேருக்கு பிஏ5 வகை, 4 பேருக்கு பிஏ4 வகை ஒமைக்ரான் கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிடங்கள் கட்டும் பணியை சுகாதாரத் துறை செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் 139 மாதிரிகள் வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் 8 பேருக்கு பிஏ5 வகை, 4 பேருக்கு பிஏ4 வகை ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக பிஏ5 வகை கரோனா உறுதியாகியுள்ளது. இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்ட 8 பேரும் குணமடைந்துவிட்டனர். கரோனா நோயாளிகள் 790 பேரில் 46 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில், 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். 6 பேர் ஐசியூவில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலைக்கு பதில்: தாய் - சேய் நல பெட்டகத்தில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து பவுடர், டானிக்கை தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி ஜெ.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர்,‘‘தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஒளிவுமறைவின்றி செயல்பட்டு வருகிறது. மிக குறைவான விலையில்தான் மருந்துகள், மருந்துப் பொருட்களை வாங்குகின்றனர். இதுபற்றி மருத்துவப் பணிகள்கழகத்திடம் தகவல் கேட்கப்படும். இந்த ஆண்டுக்கான டெண்டர் முடிந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான உணவை மாற்றி ஒப்பிடக் கூடாது’’ என்றார்.

இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு105 ஆக இருந்த நிலையில், நேற்றுபுதிதாக 107 பேர் பாதிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x