

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருதுகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
`வாழ்ந்து காட்டுவோம்' திட்டம்சார்பில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருதுகள் மற்றும் பசுமை உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு மானியம் வழங்கும் விழா, பயிலரங்கம், உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் கண்காட்சி ஆகியவை சென்னையில் நேற்று நடைபெற்றன.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், 31 மாவட்டங்களில், 120 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,994 கிராமஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் சுயஉதவிக் குழுப் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் இடம் பெற்றுள்ளனர்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 40,000 உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய 50 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீத உறுப்பினர்கள் பெண்கள். 50 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில், 28 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 25 நிறுவனங்களுக்கு தரப்படுத்தல் பயிற்சிஅளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் முதல்முறையாக `பசுமை'வகை ஆய்வும் இணைக்கப்பட்டுள்ளது. 22 உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் `பசுமை உற்பத்தியாளர் கூட்டமைப்புகளாக' கண்டறியப்பட்டுள்ளன.
இந்த கூட்டமைப்புக்கு பசுமைவிருதுகளையும், 16 நிறுவனங்களுக்கு பசுமை விருது மற்றும் பசுமை உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு மானியமும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.
முன்னதாக, உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்களுக்கான பயிலரங்கம், உற்பத்தியாளர் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள்கண்காட்சி ஆகியவை நடைபெற்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.