Published : 06 Jun 2022 08:04 AM
Last Updated : 06 Jun 2022 08:04 AM
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 4 இளம் பெண்கள், 3 சிறுமிகள் என மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகில் உள்ளது கீழ்அருங்குணம் கிராமம். இங்குள்ள கெடிலம் ஆற்றில் மழை காலத்தில் நீர் வரத்து இருப்பதும், அதன் பின் வறண்டு காணப்படுவதும் உண்டு. ஆனாலும் தடுப்பணை பகுதியில் தண்ணீர் தேங்கியிருக்கும். அண்மையில் பெய்த மழையால் ஆற்றின் தடுப்பணைக்கு அருகில் அதிகப்படியாக நீர் தேங்கியுள்ளது.
இதையறிந்த அப்பகுதியில் உள்ள ஏ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராம் மகள் சுமிதா(18), குணால் மனைவி பிரியா(19), அமர்நாத் மகள் மோனிகா(16), சங்கர் மகள் சங்கவி(18), முத்துராம் மகள் நவநீதம்(20), அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜகுரு மகள் பிரியதர்ஷினி(15) அவரது தங்கை திவ்யதர்ஷினி(10) ஆகியோர் நேற்று கீழ்அருங்குணம் கிராமப் பகுதி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
தடுப்பணையில் இருந்து, 300 மீட்டர் தொலைவில் ஆற்றில் தேங்கியிருந்த நீரில் இறங்கி குளித்தபோது, எதிர்பாரத விதமாக மோனிகா மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். உடன் குளித்த சக சிறுமிகள் இருவரையும் மீட்க ஆழமான பகுதிக்குச் சென்றபோது, அவர்களும் நீரில் மூழ்கி தத்தளித்தவாறே கூச்சலிட்டுள்ளனர்.தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அனைவரும் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு சிறுமிகளின் பெற்றோர் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதனர். உயிரிழந்தவர்களில் பிரியா என்பவருக்கு திருமணமாகி ஓரிரு மாதங்களே ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுமிகள் உயிரிழப்பு குறித்து தகவலறிந்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் மற்றும் கடலூர் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
முதல்வர் இரங்கல்
இதற்கிடையே, 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்விபத்தில் உயிரிழந்த 7 பேரின்குடும்பத்தாருக்கு முதல்வரின்பொது நிவாரண நிதியில் இருந்துதலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸும் 7 பேர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகள் குறித்து கவனம் தேவை: முதல்வர் நீர்நிலைகளில் சிறுவர், சிறுமியர், இளைஞர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் அருகே 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் மன வேதனையை அளித்தது. இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. குறிப்பாக ஆறு, குளங்கள் உள்ள நீர்நிலைப்பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், காவல்துறையினர் அனைவரும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பாக சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களுக்கு நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துச் சொல்வதுடன், அவ்வாறு யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சிகளும் வழங்கி பொதுமக்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விளக்க வேண்டும். ஆழமான ஆற்றுப் பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகில் தேவையான எச்சரிக்கை பலகைகள், தடுப்புகள் வைப்பதை உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறையும் மேற்கொள்ள வேண்டும். இனியாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதியேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT