

கோவை: சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க மருதமலைக்கு பிளாஸ்டிக் பை, குடிநீர் பாட்டில்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள்கூட்டம் பலமடங்கு இருக்கும்.வனப்பகுதியில் கோயில் அமைந்துள்ளதால் கோயிலின் அடிவாரம் மற்றும் மலைப்பகுதியில் மான், யானை, சிறுத்தை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கிறது.
இந்நிலையில், மருதமலை செல்லும் பாதையில் கடந்த ஜனவரிமாதம் இருந்த யானையின் சாணத்தில் முக கவசம், காலியான பால் பாக்கெட், சாம்பார் பொடி பாக்கெட்,பிஸ்கட் கவர், சானிடரி நாப்கின், பெண்கள் தலைமுடியை கட்டும் ரப்பர் பேண்ட் உள்ளிட்டவை இருந்தது வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும், வனவிலங்குகள் வசிக்கும் வனப்பகுதியில் பிளாஸ்டிக்கழிவுகள் வீசப்படுவது தொடர்ந்தது.
மருதமலை, அடிவார பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படும்வெள்ளரிக்காய், மாங்காயை துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் கவரில்தான் விற்பனை செய்கின்றனர். அதை வாங்கி உண்ணும் மக்கள், அந்த கவரை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு வருகின்றனர். இதுதவிர, பூஜைக்காக வாங்கிசெல்லப்படும் பொருட்களும் பாலித்தீன் கவரில் விற்கப்படுகின்றன. இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினமான நேற்றுமுதல் கோயிலுக்கு பிளாஸ்டிக்பைகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வர கோயில்நிர்வாகம், வனத்துறையினர் இணைந்து தடை விதித்துள்ளனர். அதோடு, நேற்று கார், பேருந்து மற்றும் நடந்து வந்த பக்தர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் எடுத்துவந்துள்ளார்களா என சோதிக்கப்பட்ட பிறகே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “மலையின் மேல் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை அளிக்க வேண்டாம் என நோட்டீஸ் அளித்துள்ளோம். அடிவார பகுதிகளில்உள்ள கடைகளிலும் அறிவுறுத்தியுள்ளோம். வரும் நாட்களிலும் தொடர்ந்து சோதனை நடைபெறும். தடை தொடர்பாக ஒலிபெருக்கி மூலமும் பக்தர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்” என்றனர்.