Published : 06 Jun 2022 03:49 PM
Last Updated : 06 Jun 2022 03:49 PM
கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில், அரசிடம் இருந்து நிதி பெற்று பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நடைபெற்ற ‘உங்கள் குரல் தெருவிழா’ நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் அ.மெஹரிபா பர்வின் அசரப் அலி தெரிவித்தார்.
பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொதுப்பிரச்சினைகள் தொடர்பாக, அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘உங்கள் குரல் - தெருவிழா’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், நகராட்சித் தலைவர் அ.மெஹரிபா பர்வின் அசரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு, நகராட்சிப் பொறியாளர் கவிதா மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் அ.மெஹரிபா பர்வின் அசரப் அலியுடன் பொதுமக்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதில், நீண்ட வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும், பழுதடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டும், புதிய தார்ச் சாலைகள் அமைக்க வேண்டும், சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க வேண்டும், பேருந்து நிலையத்தை முறையாக தூய்மைப்படுத்தி பராமரிக்க வேண்டும், நகரில் குப்பை தேங்க விடாமல் அகற்ற வேண்டும், தெருவிளக்குகளை பழுதுநீக்க வேண்டும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்ட பின், அ.மெஹரிபா பர்வின் அசரப் அலி பதில் அளித்து பேசியதாவது: அனைவருக்கும் சுகாதாரமான, வளர்ச்சியான நகர்மன்றமாக மேட்டுப்பாளையம் நகராட்சியை உருவாக உங்கள் ஒத்துழைப்பு அவசியம். இந்நகராட்சியில் மொத்தமுள்ள 82 கிலோ மீட்டர் தூர சாலையில், 42 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீரமைக்கப்பட்டுள்ளன. அரசிடம் நிதி பெற்று மீதமுள்ள சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்.
ரூ.96 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள் என பிரிக்கப்பட்டு பாதாள சாக்கடை வீட்டு இணைப்புக்கான வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. பொதுமக்கள் இத்தொகையை செலுத்தாமல் தவிர்க்க முடியாது. அதேசமயம் தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம்.
நகர் முழுவதும் 2,691 தெருவிளக்குகள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படுகின்றன. புதியதாக ரூ.32 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைக்க அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது. தினமும் சேகரமாகும் 12 டன் குப்பை, 237 தூய்மைப் பணியாளர்கள் மூலம் தொடர்ச்சியாக அகற்றப்படுகிறது. சீரான முறையில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘நீண்ட போராட்டத்துக்கு பின்னர் விளாமரத்தூர் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிறைய திட்டங்கள் வைத்துள்ளோம். நகராட்சியின் வளர்ச்சிக்கு பொதுமக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். பொது இடங்களில் போடும் குப்பையால் ஆரோக்கிய குறைபாடுகள் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இதை குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்’ என்று நகராட்சித் துணைத் தலைவர் அருள்வடிவு தெரிவித்தார்.
நிகழ்ச்சியை ஆசிரியர்கள் ப.சக்திவேல், ம.லிட்வின் அமலியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியை மேட்டுப்பாளையம் ஆர்த்தி சூப்பர் மார்க்கெட் நிர்வாக இயக்குநர் வித்யாசாகர் இணைந்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT