ரூ.570 கோடி குறித்த உண்மை தெரியும் வரை தமிழக தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி வழக்கு

ரூ.570 கோடி குறித்த உண்மை தெரியும் வரை தமிழக தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி வழக்கு
Updated on
1 min read

திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்த உண்மை வெளியே வரும் வரை தமிழக தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அவசர மனுவில் கூறியிருப்பதாவது:

அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரிக் கொடுத்துள்ளன. தமிழகத்தில் ரூ.100 கோடிக்குமேல் பறிமுதல் செய்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அதில் 50 சதவீதத்துக்கு மேல் யாரும் உரிமை கோராததால் அந்தப் பணம் கருவூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்க முடியாததால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ஆணையமே தேர்தலை தள்ளிவைத்துள்ளது.

இந்நிலையில், 3 கன்டெய்னர் லாரிகளில் கடத்தப்பட்ட ரூ.570 கோடியை திருப்பூரில் அதிகாரிகள் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். அந்தப் பணத்துக்கு ஸ்டேட் வங்கி உரிமை கொண்டாடி வரும் நிலையில், வங்கி நிர்வாகம் அளித்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

இவ்வளவு பெரிய தொகை, அதுவும் சரக்கு லாரிகளில் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள உத்தரவுகளும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. ஒரு வங்கிக் கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு இவ்வளவு பெரிய தொகையை கொண்டு போக வாய்ப்பே இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த தொகைக்கும் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் கண்டிப்பாக தொடர்பு உள்ளது. இந்தப் பணம் தனிப்பட்ட நபர்களுடையதா அல்லது உண்மையிலேயே ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானதா என்பதை தீர்க்கமாக விசாரிக்க வேண்டும்.

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முழுமையான விசாரணை நடத்த தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறை மண்டல இயக்குநர், மத்திய அரசின் முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு மே 15-ம் தேதி மனு அனுப்பினேன். அதற்கு எந்த பதிலும் இல்லை.

எனவே, நான் அனுப்பிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்தப் பணம் குறித்த உண்மை வெளியே வரும் வரை, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது. இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in