Published : 06 Jun 2022 06:14 AM
Last Updated : 06 Jun 2022 06:14 AM
ராமேசுவரம்: சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் இறந்த ராணுவ வீரர் நினைவிடம் முன் மனைவி மற்றும் குழந்தைகள் தர்ணா செய்தனர்.
2020-ம் ஆண்டில் லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் சீனப் படையினருடனான மோதலின்போது இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர்.
அவரது வீரத்தைப் போற்றி வீர் சக்ரா விருதை, மனைவி வானதிதேவியிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்நிலையில் பழனியின் பெற்றோர் காளிமுத்து-லோகாம்பாள், தங்களது மகனுக்கு நினைவிடம் கட்டி நேற்று திறப்பு விழா நடத்தினர். இவ்விழாவுக்கு தனக்கு அழைப்பு இல்லை எனக் கூறி, வானதிதேவி, தனது இரண்டு குழந்தைகளுடன் கணவரின் நினைவிடம் அருகே தர்ணா செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எனது கணவருக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிலை நிறுவி மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். தற்போது எனது கணவரின் குடும்பத்தினர், அவர்களாகவே நினைவிடம் கட்டி அதில் எங்கள் பெயர்களை தவிர்த்ததுடன், எனக்கும், குழந்தைகளுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தர்ணா கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT