Last Updated : 16 Jun, 2014 09:16 AM

 

Published : 16 Jun 2014 09:16 AM
Last Updated : 16 Jun 2014 09:16 AM

சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கன், ஸ்மார்ட் கார்டு என 2 வகையான டிக்கெட்கள்: சீசன் டிக்கெட் கிடையாது என அதிகாரி தகவல்

சென்னை மெட்ரோ ரயிலில் சலுகையுடன் கூடிய சீசன் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. டோக்கன், ஸ்மார்ட் கார்டு என 2 விதமான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

சென்னையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக கோயம்பேடு ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் குளு குளு மெட்ரோ ரயில் போக்குவரத்து வரும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன. தற்போது, கோயம்பேடு ஆலந்தூர் இடையே இரட்டைப் பாதையில் மெட்ரோ ரயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

மெட்ரோ ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. அதற்கு அடுத்தபடியாக ரூ.15, ரூ.20, ரூ.25 என முழு தொகையாக வசூலிக் கப்படும். மெட்ரோ ரயில் பயணத் துக்கு டோக்கன், ஸ்மார்ட் கார்டு என இரு வகையான டிக்கெட்டு கள் வழங்க முடிவு செய்யப்பட் டிருக்கிறது. அத்துடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய சலுகையு டன் கூடிய சீசன் டிக்கெட் வழங்கப் படமாட்டாது என்றும் தெரியவந்துள் ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் உத்தேசக் கட்டணம் பற்றி மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச் சகத்துக்கு ஏற்கெனவே தகவல் அனுப்பியுள்ளோம். அதன்படி, மெட்ரோ ரயில் பயணத் துக்கு 2 விதமான டிக்கெட்டுகள் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று ‘டோக்கன் டிக்கெட்’. இது ஒருநேர பயணத்துக்குப் பயன்படும். மெட்ரோ ரயில் நிலையத்தில் பணம் செலுத்தி “டோக்கன் டிக்கெட்” வாங்கிக் கொண்டு, நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தில் தேய்த்தால், தானியங்கி வாயில் திறக்கும். உள்ளே போய் ரயிலில் ஏறிச் செல்லலாம். எந்த ரயில் நிலை யத்தில் இறங்க வேண்டுமோ அங்கே இறங்கி, வெளியேறும் பாதையில் உள்ள இயந்திரத்தில் அந்த டோக்கனை போட்டால், தானியங்கி வாயில் திறக்கும். பிறகு அதன் வழியே வெளியே செல்லலாம். டோக்கன் டிக்கெட்டை யாரும் கையில் எடுத்துச் செல்ல முடியாது.

இரண்டாவது வகை டிக்கெட், ‘ஸ்மார்ட் கார்டு’ ஆகும். உதாரணத்துக்கு ரூ.200 கொடுத்து ஸ்மார்ட் கார்டு வாங்குபவர், மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது அங்கே இருக்கும் ‘ஆட்டோமேட்டிக் ஃபேர் கலெக் ஷன்’ (எ.ஏப்.சி.) மிஷினில் ஸ்மார்ட் கார்டைத் தேய்க்க வேண்டும். வாயில் திறந்ததும் உள்ளே போய் மெட்ரோ ரயிலில் ஏறி பயணம் செய்யலாம். எந்த ரயில் நிலையத்தில் அவர் இறங்குகிறாரோ அங்கிருந்து வெளியேறும்போது அங்குள்ள ‘ஆட்டோமேட்டிக் ஃபேர் கலெக் ஷன் மிஷினில் ஸ்மார்ட் கார்டை’ தேய்த்துவிட்டு வெளியேற வேண்டும்.

அப்போது அவர் எந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறி, எங்கு இறங்கினாரோ அதற்கான கட்டணம் தானியங்கி முறையில் ‘ஸ்மார்ட் கார்டு’ தொகையில் இருந்து கழிக்கப்படும். இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், இந்த ஸ்மார்ட் கார்டைக் கொண்டு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து, புறநகர் ரயில், பறக் கும் ரயில் போன்றவற்றில் பயணம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும். இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர், மாநகரப் போக்கு வரத்துக் கழக மேலாண்மை இயக்குநர், தெற்கு ரயில்வே தலைமை வர்த்தக மேலாளர் ஆகியோருடன் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட் டுள்ளன. ஒரேயொரு ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி மேற்கண்ட பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்த ஓரிரு ஆண்டுகள் ஆகும்.

டெல்லி மெட்ரோ ரயிலில் சலுகையுடன் கூடிய சீசன் டிக்கெட் வழங்கப்படுவதில்லை. அதுபோல சென்னை மெட்ரோ ரயிலிலும் சீசன் டிக்கெட் வழங்கப்படமாட்டாது.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x