Published : 19 May 2016 20:22 pm

Updated : 19 May 2016 20:38 pm

 

Published : 19 May 2016 08:22 PM
Last Updated : 19 May 2016 08:38 PM

ஓர் இடம்கூட கிட்டாத தேமுதிக - மநகூ - தமாகா அணி: அறிக 10 தகவல்கள்

10

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த ஆண்டு ஜுலையில் மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கினர். இந்தக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் கூட்டணியாக மாறியது. அதன்பிறகு இந்தக் கூட்டணியில் தேமுதிக, தமாகா கட்சிகள் இணைந்தன. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3-வது அணியாக உருவானது. இந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணியின் நிலை சொல்லும் 10 தகவல்கள்:

* தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலுமே தோல்வியை தழுவியுள்ளது.

* தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் 3-வது இடத்துக்கு சென்றார்.

* காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் விசிக தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

* தளி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன், அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-ம் இடத்தை பிடித்தார். அங்கு திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷ் வெற்றி பெற்றார்.

* தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியின் வீழ்ச்சியால், 3-வது அணி முயற்சி தமிழகத்தில் இந்த முறை தோல்வியில் முடிந்துள்ளது.

* "அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைத்து வாக்குகளை வாங்கி உள்ளன. தமிழகத்தில் இத்தகைய நச்சுச் சூழல் தொடராமல் இருக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்" என்று இந்த அணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார்.

* ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

* இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், "பண பலத்தால் அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. எங்கள் அணியினர் யாருக்கும் பணத்தை கொடுக்கவில்லை. எனவே, எங்கள் தோல்வியை நினைத்து நாங்கள் வெட்கப்படவில்லை. எங்கள் கூட்டணி தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்து இயங்கும்" என்றார்.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறும்போது, "அதிமுக, திமுகவுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற பணியை நாங்கள் தொடங்கினோம். தொடங்கிய முதல்படியிலேயே தேர்தல் வந்துள்ளது. ஆகவே, இதில் சரிவு ஏற்பட்டுள்ளது" என்றார்.

* அதிமுக வெற்றி பெற்றதற்கு யாருக்காவது ஜெயலலிதா நன்றி சொல்ல வேண்டுமென்று சொன்னால் முதலில் விஜயகாந்த், அடுத்து ராமதாஸ் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அணுகுமுறையை விமர்சித்திருக்கிறார், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

* தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 40.8%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.5%, பாமக 5.3%, பாஜக 2.9%, தேமுதிக 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1%, மதிமுக 0.9%, விசிக 0.8%, சிபிஐ 0.8%, சிபிஎம் 0.8%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.7%, தமாகா 0.5%வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக நான்காம் இடத்தில் உள்ளது. தேமுதிகவை விட பாஜக வாக்கு சதவீதத்தில் முன்னுக்குச்சென்றதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மக்கள் நலக் கூட்டணிதேர்தல் 2016விஜயகாந்த்வைகோ

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author