Published : 05 Jun 2022 04:56 AM
Last Updated : 05 Jun 2022 04:56 AM
சென்னை: திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை இன்று வெளியிட உள்ளார்.
பாஜகவின் மாநில தலைவராக கே.அண்ணாமலை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு, திமுக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால், திமுக-பாஜக இடையேயான கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இதுமட்டுமின்றி, தனியார் நிறுவனத்துக்கு அனல் மின் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அண்மையில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய கே.அண்ணாமலை, “இரண்டு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஜூன் முதல் வாரத்தில் வெளியிடுவேன்’’ என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை குறைக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும்போதும் 4 நாட்களில், 2 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று காலை 11 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்து 2 திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT