கூட்டணி ஆட்சி அமைத்தால் அதிகார பகிர்வு இருக்கும்; ஊழலையும் ஒழிக்க முடியும்: திருமாவளவன்

கூட்டணி ஆட்சி அமைத்தால் அதிகார பகிர்வு இருக்கும்; ஊழலையும் ஒழிக்க முடியும்:  திருமாவளவன்
Updated on
1 min read

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தால் தான் அதிகார பகிர்வு இருக்கும். அப்போது தான் ஊழலையும் ஒழிக்க முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி, தமாகா வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் அந்த தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ். ஏழுமலையை ஆதரித்து திருமாவளவன் இன்று பிரச்சாரம் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அவர் பேசியதாவது:

இந்த தொகுதியில் போட்டியிடும் நமது கூட்டணி வேட்பாளர் எஸ்.ஏழுமலையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதுமட்டும் போதாதது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை அமைக்க கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போது, தான் ஒரு கட்சிமுறை மாறி, கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். இது தான் நமது கூட்டணியின் லட்சியமாகும்.

கூட்டணி ஆட்சி அமைத்தால் தான் அதிகார பகிர்வு இருக்கும், ஊழலை ஒழிக்க முடியும், மதுவிலக்கு கொண்டுவர முடியும். அமைச்சரவையில் கூட்ணி கட்சிகள் இருந்ததால் தான் மாற்று கருத்துக்களை பேச முடியும். சாராய ஆலைகளை நடத்தும் திமுக, அதிமுவினர்களால் மதுவிலக்கு கொண்டுவர முடியாது. படிப்படியாக மதுவிலக்கு என அதிமுக கூறுவது ஏமாற்று வேலை.

ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என நாங்கள் அறிவித்த பின்னர் தான், திமுக, அதிமுக அவர்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளனர். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அதிகமாக பேசுவார்கள். ஆனால், எதையும் செயல்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் கட்சி தலைமையான டெல்லியில் தான் முடிவு எடுக்கப்படும். இதுவரையில் ஆட்சி புரிந்த திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் நலத்தை விட, ஊழலும், மதுவும், லஞ்சமும் தான் அதிகரித்துள்ளது.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in