

வெயிலின் தாக்கத்தால் தூத்துக் குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் வேம்பார், தூத்துக் குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஜனவரியில் தொடக்கம்
இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜனவரியில் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சக்கட்ட காலங்கள். கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பெரும் சரிவை கண்டது. கோடை மழையால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டு, மே மாதம் தான் உப்பு உற்பத்தி தொடங்கியது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த 2 மாதங்களில் 10 சதவீதம் அளவுக்கு உப்பு உற்பத்தி வந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
வேறு மாநிலங்களுக்கு சப்ளை
தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன் கூறிய தாவது: வழக்கமாக மார்ச்- ஏப்ரல் மாதங்களில் 5 முதல் 7 சதவீதம் வரை தான் உப்பு உற்பத்தி இருக் கும். இந்த ஆண்டு 10 சதவீதம் வந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வெப்பநிலை உயர்ந்துள்ளதால் உப்பின் தரமும் நன்றாக இருக்கிறது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங் களுக்கு தூத்துக்குடியில் இருந்து தினமும் 5,000 டன் உப்பு செல்லும். அதுபோல பிரீ புளோ உப்பு தயாரிப்பு ஆலைகளுக்கு 5,000 டன் உப்பு செல்லும்.
நிலக்கரி சாம்பலால் பாதிப்பு
மே காற்று (தென்மேற்கு பருவ காற்று) வீசத் தொடங்கினால் உப்பு உற்பத்தி உச்சத்தை அடையும். மழை குறுக்கிடாமல் இருந்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி ஓரளவுக்கு நன்றாக இருக்கும். உப்பு விலையை பொறுத்தவரை ஓரளவு நன்றாக இருக்கிறது. தரத்துக்கு ஏற்றவாறு டன்னுக்கு ரூ. 600 முதல் ரூ.1400 வரை விலை போகிறது.
அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் நிலக்கரி சாம்பல் உப்பளங்களில் படிந்து உப்பின் தரம் பாதிக்கப்படுகிறது. இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.