

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை மாற்றும்நிலையத்தில் குப்பை அள்ளும் வாகனம் பழுதானதால், அங்கு கொட்டப்படும் குப்பை அகற்றப்படாமல் தேங்கியுள்ளன.
சென்னை மாநகராட்சி சார்பில் ராயபுரம் மண்டலம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலம் ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரத்தியேக வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பை புளியந்தோப்பு பகுதியில் கே.பி.பூங்காஎதிரில் உள்ள குப்பை மாற்றும் நிலையத்தில் கொட்டப்படுகின்றன. அவற்றைபிரத்தியேக இயந்திரம் மூலம் அள்ளி லாரியில் கொட்டி கொடுங்கையூர் கொண்டு செல்லப்படுகின்றன.
குப்பை தொட்டிகளில் உள்ளகுப்பையை அகற்றும் வாகனங்கள் அனைத்தும் நேரடியாக கொடுங்கையூருக்குச் சென்றால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புளியந்தோப்பு வளாகத்தில் உள்ள குப்பையை அள்ளிலாரியில் கொட்டும் இயந்திரம் கடந்த 2 நாட்களாக பழுதாகியுள்ளது. இதனால் அந்த நிலையத்தில் சேரும் குப்பையை உடனுக்குடன் அகற்ற முடியவில்லை. இதனால் குப்பையை கொண்டுவரும் லாரிகள் சாலையை அடைத்தவாறு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடுத்தடுத்த இடங்களில் சேகரமாகும் குப்பையை அகற்ற முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஜேசிபி, பாப்காட் இயந்திரங்கள் மூலமாக குப்பையை லாரியில் கொட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குப்பையை அள்ளும் இயந்திரத்தை பழுது பார்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன" என்றனர்.