Published : 05 Jun 2022 08:06 AM
Last Updated : 05 Jun 2022 08:06 AM

தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்து, சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி நடத்தினர்.

எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகிலிருந்து தொடங்கிய இப்பேரணியில், மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைப் பொதுச் செயலர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலர் வன்னிஅரசு மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் கலந்துகொண்டனர். அதில் பங்கேற்றவர்கள், ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

பின்னர், ஊர்வலமாகச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக, பேரணியில் பங்கேற்றவர்கள் மத்தியில் எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றமே தமிழக ஆளுநர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியல் சாசனப்படியும், வரம்பு மீறாமலும், கூட்டாட்சித் தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும்.

ஆனால், இவற்றை மீறும் வகையிலேயே தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன. மக்களுக்கான மசோதாக்களை கண்டுகொள்ளாமல், அவற்றைப் கிடப்பில் போடுகிறார். இதேபோல, மாநில அரசை மதிக்காத போக்கு, புதிய கல்விக் கொள்கையின் பரப்புரை உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆளுநரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை முடக்கும் ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், அவரை திரும்பப் பெற வலியுறுத்தி, மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x