Published : 05 Jun 2022 07:56 AM
Last Updated : 05 Jun 2022 07:56 AM
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரி கடந்த 50 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு உயர்த்தி, சுயநிதி பிரிவுக்கு இணையான கட்டணத்தை வசூலிக்கிறது. கடந்த2020-21 முதல் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவி பெறும் பிரிவில், பணி நிறைவு பெறும் பேராசிரியர்களின் இடத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதையும் நிறுத்திவிட்டது. இதுபோல, அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்த 11 பேராசிரியர்களை 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்துள்ளது.
அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று கல்வி நிறுவனம் தொடங்கி, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்டு அதை அப்படியே சுயநிதி கல்லூரியாகவே மாற்றி செயல்படுத்தி வருகிறது. அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதால் அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளில் அப்பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் சேர முடியவில்லை.
எனவே, தாங்கள் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1976-ன் 14 (அ) பிரிவை பயன்படுத்தி, ஒரு தனி அலுவலரை நியமித்து, அரசின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி தமிழக அரசே இக்கல்லூரியை ஏற்று நடத்த வேண்டும்
மேலும், இதுபோன்று தமிழகம் முழுவதும் இயங்கும் 250 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா, அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT