வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது

குற்றாலம் பிரதான அருவியில்  நேற்று  குறைந்த அளவில் தண்ணீர் விழுந்ததால் வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலாப் பயணிகள்.
குற்றாலம் பிரதான அருவியில் நேற்று குறைந்த அளவில் தண்ணீர் விழுந்ததால் வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டில் கோடை கால மான மே மாதத்திலேயே சாரல் களைகட்டியது. தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. முன்கூட்டியே சாரல் சீஸன் தொடங்கியதால் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. நேற்று குற்றாலம் பிரதான அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஒரு சிலர் மட்டுமே குளிக்கும் அளவுக்கு குறைவாக தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் 2 கிளைகளில் மட்டும் குறைவாக தண்ணீர் விழுந்தது. சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று அருவிகளில் குளித்தனர். சிற்றருவி, புலியருவி ஆகியவை நீர் வரத்தின்றி ஏற்கெனவே வறண்டுவிட்டன.

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளிலும் நீர்வரத்து அதிகரிக்கவில்லை. கடனாநதி அணை நீர்மட்டம் 44.20 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 53.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 36.09 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 28 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 56.50 அடியாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in