

“நெய்வேலி பகுதி மக்களின் நிலத்தைப் பறித்து, அங்கு சுரங்கம் தோண்டி வட மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டிய அவசியம் என்ன?” என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெய்வேலி நிறுவனத்திற்கு ஏற்கெனவே நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுவழங்க வேண்டும்; வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்; மாற்று இடத்திற்கான பட்டா வழங்குவது உள்ளிட்ட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், 3-வது சுரங்கத்திற்கு விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலத்தை கையகப் படுத்தக் கூடாது.
மாற்று குடியமர்வுக்கு 5 சென்ட்பட்டாவுடன் கூடிய மனை கொடுத்து, அதில் வீடு கட்டிக் கொடுக்கவேண்டும், நிலம்எடுத்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு உரிய வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “என்எல்சி நிறுவனத்திற்கு கடந்த 1952-ம் ஆண்டு முதல் சுரங்கம் மற்றும் 2-வது சுரங்கத்திற்கு இப்பகுதி விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கினர். இந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்கப்படவில்லை.
நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டு மென சட்டம் இருந்தாலும் கூட, தகுதி உள்ளவர்களை கூட இதுவரை என்எல்சி நிர்வாகம் நிரந்தர வேலை வழங்கவில்லை. காண்ட்ராக்ட் தொழிலாளர்களை சேர்த்து சொசைட்டி ஆக்கி படிப் படியாக நிரந்தரமாக்குவதாக சொன்னார்களே தவிர அது கூட நிறைவேற்றப்படவில்லை.
தற்போது 3-வது சுரங்கம்அமைப்பதற்கான நிலம் கையகப் படுத்தும் நடவடிக்கைகளில் இந் நிறுவனம் இறங்கியுள்ளது. கடந்த கால என்எல்சி நிறுவனத்தின் செயல்பாடுகளால், இப்பகுதி விவசாயிகள் என்எல்சி நிறுவனத் திற்கு வீடு, நிலம் வழங்க முன் வரவில்லை.
இச்சூழலில், தமிழக அரசை நான் கேட்டுக்கொள்வது, நெய் வேலி நிறுவனத்தில் மின்சார உற்பத்தி சம்பந்தமான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு, வேண்டுமானால் நிலத்தைகையகப்படுத்தலாம் வடமாநிலத் தில் இருப்பவர்களுக்கு வேலை கொடுத்து, அதற்காக இங்குள்ள நிலம் கொடுத்த விவசாயிகள் அழிய வேண்டுமா?” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.