Published : 05 May 2016 08:51 AM
Last Updated : 05 May 2016 08:51 AM

‘மனிதன்’ படத்துக்கு வரிவிலக்கு கோரி வழக்கு: வணிகவரித் துறை பதிலளிக்க உத்தரவு

‘மனிதன்’ படத்துக்கு வரிவிலக்கு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க வணிக வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள ‘மனிதன்’ படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. இந்நிலை யில் ‘மனிதன்’ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கக் கோரி அப்படத்தை தயாரித்த ரெட்ஜெயிண்ட் மூவீஸ் சார்பில் சரவணமுத்து உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘மனிதன் படத் தைப் பார்த்த குழுவினர், தமிழில் மனிதன் என்ற வார்த்தை கிடையாது. மாந்தர் அல்லது மாந்தன் என்பது தான் தூய தமிழ் வார்த்தை எனக்கூறி இதற்கு வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டனர். வரி விலக்கு சான்றிதழ் குழுவில் உள்ளவர்களுக்கு போதிய தமிழ் ஞானம் இல்லை. அதனால்தான் மனிதன் என்ற வார்த்தை தமிழே இல்லை எனக்கூறியுள்ளனர். வணிக வரித்துறையினரும் அந்த குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்யாமல், வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. எனவே உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மனிதன்’ படத்துக்கு வரிவிலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன் இதுகுறித்து வணிகவரித்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தார்.

வரிச் சலுகையால் பயனில்லை

வரிச்சலுகை குறித்து கருத்து தெரிவித்த திரைப்படத்துறை முன்னாள் தணிக்கை அதிகாரி ஞான.ராஜசேகரன், “தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளிப்பது நடிகர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. ‘என்னால்தான் மக்கள் திரையங்குக்கு வருகிறார்கள்’ என்று கூறி தனது சம்பளத்தை உயர்த்தும் முன்னணி ஹீரோக்கள் இங்கு ஏராளமாக உள்ளனர். நடிகர்களின் இந்த போக்கு மாறினால்தான் சினிமாவுக்கு நல்லகாலம் வரும்” என்றார்.

எழுத்தாளர் கேபிள் சங்கர் கூறும் போது, “வரி விலக்கு அளிக்கப்படு வதால் படம் பார்க்க வரும் மக்களுக்கு எந்த விதத்திலும் பலன் கிடைப்பதில்லை. ஒரு படத்துக்கு வைக்கப்படும் பெயர் தமிழ் வார்த்தைதான் என்பதை வரிவிலக்கு குழுவில் உள்ள தமிழ் அறிஞர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். தணிக்கைப் பிரிவில் ஒரு படம் ‘யூ’ சான்றிதழ் பெற்றாலும் வரிவிலக்குப் பிரிவுக்குச் சென்று படத்தை திரையிட்டுக் காட்ட வேண்டும். அவர்களின் ஒப்புதலும் அவசியம். அதில் பெரும்பாலும் அரசியல் இருக்கவே செய்கிறது’’ என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x