

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்கான சொகுசுக் கப்பல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஆழ்கடல் சொகுசுக் கப்பல் சுற்றுலா தொடங்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்திருந்தார். இதன்படி, சென்னையில் ஆழ்கடலுக்கு சென்று வரும் வகையில் கார்டிலியா நிறுவனம் சொகுசுக் கப்பலை சேவையை வழங்கவுள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த சொகுசுக் கப்பல் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை 2 நாட்களும், துறைமுகம் - விசாகப்பட்டினம் - புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் வரை 5 நாட்கள் பயணம் என வகைளில் இந்த சொகுசுக் கப்பல் இயக்கப்படவுள்ளது.
12 தளங்கள் கொண்ட இந்த சொகுசுக் கப்பல் இந்தியாவின் பெரிய சொகுசு கப்பல்களுள் ஒன்றாகும்.
இந்தக் கப்பலில் உணவகங்கள், விளையாட்டு தளங்கள், அரங்கம், ஆழ்கடல் பகுதியில் திருமணங்கள் நடத்துவதற்கான வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது.
இதற்குக் கட்டணம் ரூ.20,000-ல் இருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.