Published : 09 May 2016 08:51 AM
Last Updated : 09 May 2016 08:51 AM

வீடு வீடாக படையெடுக்கும் வேட்பாளர்கள்: ஆர்.கே.நகரில் களைகட்டும் பிரச்சாரம்

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்கு கேட்டு வருகிறார்கள்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

45 பேர் களத்தில் உள்ளனர்

அவரை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் (திமுக), வி.வசந்திதேவி (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), எஃப்.ஆக்னஸ் (பாமக), எம்.என்.ராஜா (பாஜக), திருநங்கை ஜி.தேவி (நாம் தமிழர் கட்சி), உட்பட 45 பேர் களத்தில் உள்ளனர். தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாகவும் இது உள்ளது.

கடந்த 2015 ஜூன் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இத்தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார் ஜெயலலிதா. அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு ஆகியோர் தலைமையில் ஜெயலலிதாவுக்காக அதிமுகவினர் இங்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர். வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல், பெரம்பூர் தொகுதி வேட்பாளராக இருந்தாலும் இத்தொகுதில் அதிக நேரம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் அதிமுகவின் பிரச்சாரம் இங்கு சற்று மந்தமாக இருந்தது. ஆனால் இத்தொகுதியில் ஜெயலலிதா கடும் போட்டியை சந்திக்க நேரிடும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் பிரச்சாரம் வேகமெடுத்துள்ளது. இத்தொகுதியில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, மின்வெட்டு இல்லாத நிலை, வெள்ள நிவாரணத் தொகை வழங்கியது, கடந்த ஓராண்டில் ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். ஜெயலலிதாவின் வருகைக்குப் பின் அதிமுகவினரின் பிரச்சாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

அதிமுகவினருக்கு சவால் விடும் வகையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். தண்டையார்பேட்டை , புது வண்ணாரப்பேட்டை பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்த அவர், ‘தி இந்து’விடம் கூறும்போது “தொகுதி முழுவதும் ஒரு சுற்று வலம் வந்து விட்டேன். அதிமுக அரசுக்கு எதிரான கடும் அதிருப்தியை எங்கும் பார்க்க முடிகிறது. கடந்த 15 ஆண்டுகளாக அதிமுகதான் இங்கு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மக்களின் நிலை படுமோசமாக உள்ளது. முதல்வரை எதிர்த்து நான் போட்டியிட்டாலும் அவரையும் ஒரு வேட்பாளராகத்தான் பார்க்கிறேன். அதிமுக அரசுக்கு எதிரான அலை என்னை சட்டமன்றத்துக்கு அனுப்பும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் நலக் கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ள கல்வியாளர் வி.வசந்திதேவி தொகுதியில் பரவலாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தண்டையார்பேட்டை, கொருக்குப் பேட்டை பகுதிகளில் நேற்று திறந்த ஜீப்பிலும், நடந்தும் சென்று அவர் வாக்கு சேகரித்தார். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் சரிசமமாக விமர்சிக்கும் வசந்திதேவி, “முதல் முறையாக இரு கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசு அமையும் சூழல் உருவாகியுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

பாஜக சார்பில் போட்டியிடும் எம்.என். ராஜாவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை தண்டையார்பேட்டை பகுதியில் வீடு, வீடாகச் சென்று அவர் பிரச்சாரம் செய்தார். பிரதமர் மோடியின் படம் பொறிக்கப்பட்ட பனியன், தொப்பி அணிந்த தொண்டர்கள் அவருடன் செல்கின்றனர். பாமகவின் தேர்தல் அறிக்கையையும், முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸையும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கிறார் அக்கட்சியின் வேட்பாளர் ஆக்னஸ். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜி.தேவி மற்றும் சில சுயேட்சை வேட்பாளர்களும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரின் தொகுதி என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ஆர்.கே.நகர் தொகுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x