வாகன ஓட்டிகள் கவனத்திற்கு | சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் 

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு | சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் 
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இன்று முதல் அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சோதனை முயற்சியாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இதன்படி இன்று முதல் அண்ணாசாலை சுமித் ரோடு சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பி பட்டுலாஸ் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லலாம். மேலும் ஒயிட்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம்.

காலை மற்றும் மாலை போக்குவரத்து அதிகமான நேரங்களில் ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் ஸ்மித் சாலை சந்திப்பில் ஏற்படும் நெரிசல்களை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம் மற்றும் டவர் கிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைய அனுமதிக்கப்படும்.

ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பட்டுலாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் ரோட்டிற்கு சற்று முன்பாக உள்ள ரேமன்ட்ஸ் துணி கடை எதிரே “U” திருப்பம் செய்து ஸ்பென்சர் சந்திப்பு நோக்கி செல்லலாம்.

இதைப்போன்று ஓஎம்ஆர் சாலை மற்றும் இசிஆர் சாலைகளில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஓஎம்ஆர் இந்திரா நகர் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள், ஓ.எம்.ஆர் சர்வீஸ் சாலை வழியாக (மத்திய கைலாஷ் பின்புறம்) இடதுபுறம் திரும்பி சர்தார் பட்டேல் சாலையை அடைந்து காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் “U” திருப்பம் திரும்பி மீண்டும் சர்தார் பட்டேல் சாலை வழியாக சி.பி.டி சந்திப்பை அடைந்து அவரவர் இலக்கை அடையலாம்.

அல்லது பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா நகர் சிக்னலில் வலது புறம் திரும்பி இந்திரா நகர் 2வது அவின்யூ (வாட்டர் டேங்க் சாலை) இந்திரா நகர் 1வது அவின்யூ சந்திப்பு வழியாக எல்.பி.ரோட்டை அடையலாம்

இந்த போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சியாக 10 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in