Published : 04 Jun 2022 05:05 AM
Last Updated : 04 Jun 2022 05:05 AM
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள், அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கும் மெரினாவில் உள்ள நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.
தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த ஏப்ரலில் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினமான நேற்று, முதல்முறையாக அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சமீபத்தில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவால் திறந்து வைக்கப்பட்ட கருணாநிதியின் சிலைக்குகீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, ட்ரோன் மூலம் கருணாநிதி சிலை மீது மலர்கள் தூவப்பட்டன. இதையடுத்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களிலும் முதல்வர் மரியாதை செலுத்தினார். கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணியையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு,எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றனர். திமுக மகளிர் அணிசெயலாளர் கனிமொழி உள்ளிட்டோரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, நேற்று காலை அண்ணா அறிவாலயத்திலும், அதன்பின் முரசொலி அலுவலகத்திலும் கருணாநிதியின் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கோபாலபுரம் இல்லம் மற்றும் சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, அரசு துறைகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர மாநிலம் முழுவதும் திமுகவினரும் கருணாநிதி பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினர். பல்வேறு பகுதிகளில் கருணாநிதியின் உருவப்படத்தை அலங்கரித்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கருணாநிதி படத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மலர்தூவி மரியாதை செலுத்தினார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர், ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
‘சமத்துவ சிந்தனையாளர் கருணாநிதி’: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி; ஆட்சித் தேரை சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவ சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்; ‘உடன் பிறப்பே...' என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர்!
இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு காணும் தமிழகத்தின் தலைமகன் - தன் உதிரத்தால் எனைச் சமைத்த எந்தை ‘தமிழினத் தலைவர்' கலைஞரைப் போற்றினேன்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT