Published : 04 Jun 2022 07:29 AM
Last Updated : 04 Jun 2022 07:29 AM
தஞ்சாவூர்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய சங்கத்தமிழ் நூல், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட உள்ளதாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார். இதற்கான பணி நேற்று தொடங்கியது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் மாலை அணிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ் இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட, தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆணை பெற்று, இத்திட்டத்துக்கு ரூ.12 லட்சம் நிதியுதவியும் பெறப்பட்டுள்ளது. அதன்படி, இப்பணியை மேற்கொள்ள எனது தலைமையில் 5 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் சோ.ந.கந்தசாமி, கி.அரங்கன், கு.வெ.பாலசுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்பு துறை தலைவர் சவு.வீரலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பணி தொடங்கியது
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய சங்கத்தமிழ் நூலை பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம் செய்ய இக்குழு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்க் கனி பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள சங்கத்தமிழ் நூலை, ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்க ஜெர்மனியை சேர்ந்த சுசீந்திரனும், பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்க பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சச்சிதானந்தமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதி பிறந்த நாளான இன்று (நேற்று) இப்பணி தொடங்கியுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓராண்டு காலத்துக்கு சிறப்பு பயிலரங்குகள் நடத்தப்பட உள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பு மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களும் பங்கேற்று கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT