

உடுமலை: உடுமலை அருகே மின்வாரிய அலுவலகம் பூட்டப்பட்டதால் மின் கட்டணம் செலுத்தமுடியாமல் நுகர்வோர் அவதிக்குள்ளானதாக புகார் எழுந்துள்ளது.
உடுமலை அருகே எரிசினம்பட்டி கிராமத்தில் மின்வாரியத்துக்கு சொந்தமான கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம், 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த சிலர் மின் கட்டணம் செலுத்தச் சென்றபோது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் மின் துண்டிப்பை தவிர்ப்பதற்காக தனியார் இ-சேவை மையங்களை அணுகி மின் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். எவ்வித முன் அறிவிப்புமின்றி அலுவலகத்தை பூட்டிச்சென்றது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் திருப்பூர் ஆட்சியருக்கு, வாட்ஸ்அப் மூலம் புகார் அனுப்பினார். இதுகுறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி கூறும்போது, ‘‘எரிசினம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் 2 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஒருவர் ரீடிங் எடுக்கச் சென்ற நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மற்றொரு ஊழியர் அலுவலகத்தை பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். அருகில் உள்ள தேவனூர்புதூர் அலுவலகத்தில் இருந்து ஊழியர் ஒருவர் எரிசினம்பட்டி அலுவலகத்துக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் செல்லமுடியவில்லை. ஆட்சியரிடம் கொண்டு செல்லப்பட்ட புகாருக்கு, இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாக மாவட்ட நிர்வாகத்திடம் பதில் அளித்துள்ளோம்’’ என்றார்.