

இளைஞர்கள் மனது வைத்தால் தமிழகத்தில் இலவசங்களை ஒழித்து, புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
சேலம் அடுத்த மகுடஞ்சாவடியில் சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் முருகேசனை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அதிமுக, திமுக இலவசங்களைக் கொடுத்து மக்களின் மூளையை மங்கச் செய்து வருகின்றனர். நல்ல ஆட்சியை வழங்கவில்லை. அம்மா குடிநீர், அம்மா லேப் டாப் என சுய விளம்பரம் தேடிக்கொள்வதில் தான் அதிமுக ஆர்வம் காட்டுகிறது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இலவசங்களுக்காக ரூ.11,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகையைப் பயன்படுத்தி 25 ஆயிரம் பள்ளிகளை உருவாக்கி, கல்வி வளர்ச்சியை அதிகரித்து இருக்கலாம் அல்லது 11,000 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி சுகாதாரத்தை மேம்படுத்தி இருக்கலாம்.
இளைஞர்கள் மனது வைத்தால் தமிழகத்தில் இலவசங்களை ஒழித்து, புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தமிழகத்தில் தண்ணீர், மின் பற்றாக்குறை, வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
தென் மாநிலத்தில் மின் உற்பத்தியை 3,450 மெகாவாட்டில் இருந்து 2 ஆண்டுகளில் 5,900 மெகாவாட்டாக மத்திய அரசு அதிகரிக்கச் செய்துள்ளது. 2018-ம் ஆண்டுக்குள் 8,000 மெகாவாட்டாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். மின்சாரத்தை வீடுகளுக்கு கொண்டு செல்ல மாநில அரசு முட்டுக்கட்டையாக உள்ளது.
கடந்த 10 ஆண்டு காங்கிரஸ் அரசில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு ரூ.1,86,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மோடி அரசு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி லாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
திமுக, அதிமுக, காங்கிரஸ் ஊழல் ஆட்சியால் தமிழகமும், இந்தியாவும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டன. வாஜ்பாய் மற்றும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஊழலே கிடையாது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமை அதிகரித்துள்ளது.
இலங்கை தமிழர்களின் நலனிலும் பாஜக அக்கறை கொண்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக 30 ஆயிரம் வீடுகளை பாஜக அரசு கட்டிக்கொடுத்துள்ளது. வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டபோது, உடனடியாக சென்னை வந்த மோடி, ரூ.2 ஆயிரம் கோடியை நிவாரணத்துக்காக ஒதுக்கினார்.
இவ்வாறு அவர் பேசினார்.