Published : 04 Jun 2022 06:24 AM
Last Updated : 04 Jun 2022 06:24 AM
சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1.15 லட்சம் பேருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் குரங்கு அம்மை பரிசோதனைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அதன்பின் அமைச்சர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் நோய்த் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் இறைச்சியின் தரம் குறித்து ஆய்வுசெய்ய உணவுத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக ஈரோட்டில் கருமுட்டை விற்பனை செய்ததாக வெளியான செய்திகள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளை குரங்கு அம்மை தற்போது அச்சுறுத்தி வருகிறது. மொத்தம், 30 நாடுகளில் 550 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அந்த நோய் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குரங்கம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கடந்த மே 20-ம் தேதிமுதல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதன்படி, கடந்த 14 நாள்களில் 1.15 லட்சம் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 90,504 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்படவில்லை. எனினும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT