Published : 20 May 2016 09:41 AM
Last Updated : 20 May 2016 09:41 AM

ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கை நழுவியதே..- சோகத்தில் கதறி அழுத திமுக தொண்டர்கள்

குறைந்த தொகுதிகள் வித்தியாசத் தில் ஆட்சியை பிடிக்க முடியாத சோகத்தில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறி வாலயத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் கதறி அழுதனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னை தேனாம் பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவா லயத்தில் காலை 7 மணி முதலே கட்சித் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8.30 மணிக்கு தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் திமுக முன்னிலை வகித்ததால் திமுக தொண்டர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக குரல் எழுப்பினர்.

பிறகு முதல் 2 சுற்றுகளின் முடிவில் திமுகவும், அதிமுகவும் மாறிமாறி முன்னிலை வகித்தன. பின்னர் அதிகமான தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்தது. இதனால் சோகமடைந்த திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலய வளாகத்தில் ஆங்காங்கே சோகத் துடன் அமர்ந்தனர். அறிவாலயத் தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த டி.வி.யில் தேர்தல் முடிவுகளை பார்ப்பதும், பின்னர் வெளியே வந்து சோகத்துடன் அமர்வதுமாக இருந்தனர். அவ்வப்போது அதிமுக - திமுகவுக்கு இடையே யான இடைவெளி குறைந்த போதெல்லாம் திமுக தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

இறுதியில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியானதும் திமுக தொண்டர்கள் கதறி அழுதனர். ‘கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லையே’ என பலர் மார்பில் அடித்துக்கொண்டு அழுது புரண்டனர். இதனால், அறிவாலய வளாகமே சோகத்தில் மூழ்கியது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தவிர திமுகவின் முக்கிய நிர்வாகிகள் யாரும் அறிவாலயத்துக்கு வரவில்லை.

கோபாலபுரத்திலும் சோகம்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லம் முன்பு காலை 7 மணி முதலே திமுக நிரவாகிகளும், தொண்டர்களும் வரத் தொடங்கினர். காலை 8.30 மணிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் வந்தனர்.

9.10 மணிக்கு வந்த திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி 10.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். தேர்தல் முடிவுகள் குறித்து இவர்கள் அனைவரும் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினர். கனிமொழியும், ராசாத்தி அம்மாளும் 11.30 மணிக்கு மீண்டும் வந்தனர். பகல் 12.45 மணிக்கு பத்திரிகையாளர்கள் கண்ணில் படாமல் ஸ்டாலின் வெளியேறினார்.

2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க முடியாத சோகத்தில் திமுக தொண்டர்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே என திமுக தொண்டர்கள் கதறி அழுதனர்.

எப்படியாவது திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று விடும் என்ற நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்திலும், கோபாலபுரத்திலும் நேற்று மாலை வரை காத்திருந்தனர். பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x